கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தற்போது திங்கள்நகர் அருகே வாடகை வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு கடந்த 7 மாதங்களாக கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புக்குச் சென்று வந்தார். இவர் வழக்கம்போல் கம்ப்யூட்டர் வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து கிளம்பி உள்ளார். ஆனால் வகுப்புக்குச் செல்லாமல் மண்டைக்காடு புதூர் தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். பிரார்த்தனை முடிந்து மதியம் திங்கள்நகர் செல்வதற்காக புதூர் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது சிறுமியின் பாட்டி வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுபாஷ் (38) பைக்கில் வந்துள்ளார். பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்த சுபாஷ், பாட்டி வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறி பைக்கில் ஏற்றி உள்ளார். பாட்டியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் எனக் கூறியதால் சிறுமி பைக்கில் ஏறிச் சென்றார். ஆனால் அவர் பாட்டி வீட்டுக்குச் செல்லாமல் பைக்கை நடுவூர்கரை செக்காரவிளையில் உள்ள நண்பர் ரமேஷ் (36) வீட்டுக்குக் கொண்டு சென்றார். அப்போது வீட்டில் இருந்த ரமேஷ் ஏதோ காரணம் சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டார். தொடர்ந்து சுபாஷ் சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் சிறுமியை பைக்கில் திங்கள்நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார். அடுத்த நாள் மிகவும் சோர்வுடன் இருந்த சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த தாய், அது குறித்து விசாரித்துள்ளார். அப்போது பாட்டியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுபாஷ் பாலியல் வன்கொடுமை செய்ததைக் கூறினார். இதைக் கேட்டு அதிர்ந்த தாய் உடனடியாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.