சீனாவுக்கு 24*7 மணி நேரமும் கொட்டுது பணமழை.. வெப்பத்தால் படாதபாடு படும் ஐரோப்பா.. மெகா லக்! | Chinese Air Conditioner Manufacturers Boost Production as European Heatwaves Fuel Soaring Demand

Spread the love

International

oi-Vigneshkumar

பெய்ஜிங்: ஐரோப்பாவில் பல்வேறு நாடுகளிலும் வெப்ப அலை படுத்தி எடுத்து வருகிறது. மக்களால் வெளியே செல்லக்கூட முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகவே இருக்கிறது. இதைச் சமாளிக்க அங்குள்ள மக்கள் போர்ட்டபிள் ஸ்பிலிட் ஏசிக்களை அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் சீனாவில் தயாரிக்கப்படும் போர்ட்டபிள் ஏசிக்களுக்கு ஐரோப்பிய சந்தையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நம்ம ஊரில் ஏப்ரல், மே மாதங்களில் வெப்பம் படுத்தி எடுக்கும். அதிலும் வேலூர், சென்னை எனப் பல பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி வெப்பம் படுத்தி எடுக்கும். எப்போ தான் இந்த கோடைக் காலம் முடியுமோ என்ற ரேஞ்சிலேயே நாம் இருப்போம். ஆனால், சமீபத்திய ஆண்டுகளாக நமக்கு இணையாக வெளிநாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பாவிலும் வெப்பம் அதிகரித்து வருகிறது.

China European Heatwaves

வெப்ப அலை

இந்தாண்டும் கூட அதே நிலைமை தான். ஐரோப்பிய நாடுகள் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக, அங்கு ஏசி உள்ளிட்ட குளிரூட்டும் சாதனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, சீனாவில் தயாரிக்கப்படும் போர்ட்டபிள் ஸ்பிலிட் ஏர் கண்டிஷனர்களுக்கு ஐரோப்பிய சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம். இந்த சூழலை வைத்து விற்பனையை அதிகரிக்க முயலும் சீன நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியைப் பல மடங்கு அதிகரித்துள்ளன.

சீனாவின் முக்கிய வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான மீடியா, தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள தனது ஷுண்டே உற்பத்தி ஆலையில் போர்ட்டபிள் ஸ்பிலிட் ஏசி உற்பத்தியை அதிகரித்துள்ளது. ஐரோப்போவில் அதிகரிக்கும் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சீனா ஐரோப்பா அதிவேக சரக்கு ரயில்கள் மூலம் ஐரோப்பாவிற்கு விரைவாக அனுப்பப்பட்டு வருகின்றன.

காரணம் என்ன

பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் பொதுவாகவே ஏசி பயன்பாடு குறைவாகவே இருக்கும். ஆனால், அந்த நாடுகளிலும் வெப்பம் காரணமாக இப்போது ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த மீடியா நிறுவனத்தின் ஏசி விற்பனை மட்டும் கடந்த ஆண்டை விட 70 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. மீடியா நிறுவனத்தைத் தவிர, கிரீ மற்றும் டிசிஎல் போன்ற பிற முன்னணி சீன பிராண்டுகளும் போர்ட்டபிள் ஏசிகளின் உற்பத்தியை அதிகரித்துள்ளன.

ஸ்பிலிட் ஏசிகள் ஏன்

ஐரோப்பாவைப் பொறுத்தவரை வழக்கமான ஸ்பிலிட் ஏசிகளை விட இந்த போர்ட்டபிள் ஸ்பிலிட் ஏசிகள் விற்பனையே அதிகமாக இருக்கிறது.. ஏனென்றால் வழக்கமான ஸ்பிலிட் ஏசிகளை பொருத்த வேண்டும் என்றால் வெளியிலிருக்கும் சுவர்களில் துளையிட வேண்டும். ஆனால், பாரிஸ் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஐரோப்பிய நகரங்களில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் கடுமையான விதிகளின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. இதனால் அங்குச் சுவர்களில் துளையிட அங்குள்ள சட்டங்கள் அனுமதிப்பதில்லை.

மேலும், அங்கு தொழிலாளர் கூலியும் அதிகம். அதாவது சில நேரம் ஏசி கட்டணத்தை விட அதை பொருத்த ஆகும் கட்டணம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே சுவர்களில் துளையிடத் தேவையில்லாத, எளிதில் கையாளக்கூடிய மற்றும் குறைந்த விலையிலான சீன போர்ட்டபிள் ஸ்பிலிட் ஏசிகளை நோக்கி அங்குள்ள மக்கள் செல்கிறார்கள்.

தட்டி தூக்கும் சீனா

அதேநேரம் சீன கருவிகளின் தரமும் கூட சிறப்பாக இருப்பதாகவே ஐரோப்பாவை சேர்ந்த நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தேடி அலைந்து இந்த போர்ட்டபிள் ஏசிக்களை வாங்கி வருகிறார்கள். ஏசிகள் மட்டுமின்றி, மின்விசிறி இருக்கும் தொப்பிகள், கையில் எடுத்து செல்லக்கூடிய சிறிய மின்விசிறிகள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இதுபோல வெளியில் காலத்தில் பயன்படுத்தப்படும் குளிரூட்டும் சாதனங்களின் விநியோகச் சங்கிலியில் சீனாவின் ஆதிக்கம் மிக வலுவாக உள்ளது. கடந்த 2025ல் சீனா 27.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏசிக்களை ஏற்றுமதி செய்து சர்வதேச ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளது. இது வரும் காலங்களில் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் இந்த வெப்ப அலையின் போது, உள்ளூர் மக்களின் தேவைகளை மிகச் சரியாகப் பூர்த்தி செய்து மிக பெரியளவில் கல்லா கட்டி வருகிறது சீனா!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *