காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி மேடைகளில் நகைச்சுவை நாடகம் நடத்தும் சீமானுக்கு, அந்தக் கேள்வியை எழுப்புவதற்கே என்ன தகுதி இருக்கிறது? நாளொரு நாடகமும் பொழுதொரு வேஷமும் போட்டு அரசியல் பிழைப்பு நடத்திவரும் சீமான், காங்கிரஸ் பேரியக்கத்தையும், ராகுல் காந்தியையும் விமர்சிப்பது அரசியல் நாகரிகத்தின் எல்லையை மீறிய செயல். ராகுல் காந்தியை விமர்சிப்பதற்கு சீமானுக்கு கொள்கைத் தகுதியோ, அரசியல் நேர்மையோ, மக்கள் அங்கீகாரமோ கிடையாது.
‘நாய் வேஷம் போட்டால் குரைக்கவும், நரி வேஷம் போட்டால் ஊளையிடவும்’ மட்டுமே தெரிந்த ஒரு வசன வியாபாரி, கொள்கை அரசியலைப் பற்றி பேசுவது தமிழ்நாட்டு மக்களுக்கே வேடிக்கையாக உள்ளது. நான்கு சதவீத வாக்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு, தன்னை மாற்று சக்தியாக விளம்பரம் செய்து கொள்வதால் மக்கள் தீர்ப்பை மாற்ற முடியாது. இன்று தி.மு.க-வினர் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால், அதற்குப் பின்னால் காங்கிரஸ் பேரியக்கத்தின் உறுதியான வாக்கு வங்கியும், அடித்தட்டு தொண்டர்களின் இடைவிடாத உழைப்பும் இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.