தென்காசி மாவட்டம், கேரள மாநிலத்திற்கு அருகில் அமைந்துள்ளதால், கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையும் இப்பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. தென்காசிக்கு சுற்றுலா வரும் பலர் குற்றாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களைப் பார்வையிட்ட பின்னர் சுந்தரபாண்டியபுரத்திற்கும் வருகின்றனர்.
சூரியகாந்தி மலர்கள் பூத்துள்ள வயல்களுக்குள் நின்று புகைப்படம் எடுப்பது, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது, இயற்கைக் காட்சிகளை ரசிப்பது என சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்கின்றனர். இதனால் முன்பு விவசாயக் கிராமமாக மட்டுமே அறியப்பட்ட சுந்தரபாண்டியபுரம் தற்போது புதிய புகைப்படச் சுற்றுலாத் தலமாக உருவெடுத்து வருகிறது.
சூரியகாந்தி மலர் சாகுபடியின் மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதில்லை என்றாலும், சுற்றுலாப் பயணிகளையும் புகைப்படக் கலைஞர்களையும் ஈர்க்கும் வகையில் விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர்.
வயலுக்குள் சென்று புகைப்படம் எடுக்க விரும்புபவர்களிடம் தலா ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு சிறிய அளவிலான கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. விவசாயிகளின் இந்த முயற்சி, விவசாயத்தையும் சுற்றுலாவையும் இணைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.