இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, வேலைவாய்ப்பு மோசடி மூலம் கிடைத்த பணத்தைச் சட்டவிரோத பரிமாற்றம் செய்ததாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, அந்த வழக்கு சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 410 நாள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனாலும், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அரசின் அனுமதி அவசியம் என்பதாலும், செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர முந்தைய திமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்படவில்லை என்பதாலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்னும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்க முடியவில்லை.

செந்தில் பாலாஜி மீதான வழக்கின் விசாரணைக்கு அனுமதி கோரி கடந்த ஆண்டு மே 14-ஆம் தேதி அப்போதைய ஆளுனர் ஆர்.என். இரவி அவர்களிடம் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி கோரி அரசிடம்தான் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறி அமலாக்கத்துறையின் கோரிக்கையை முந்தைய அரசு நிராகரித்து விட்டது.
அதைத் தொடர்ந்து தான் இப்போது அமலாக்கத்துறை தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உரிய ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பியுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் வேலை வழங்குவதாகக் கூறி ஆயிரக்கணக்கானோரிடம் பணம் வாங்கியதை செந்தில் பாலாஜியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.