
சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் சுரேஷ் (44). இவர் தி.நகரில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவன ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வழங்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஆதம்பாக்கம், கோதாவரி தெருவை சேர்ந்த 70 வயது மூதாட்டி திலகா சுரேசை தொடர்பு கொண்ட தனது வீட்டிற்கு ஒரு இளம்பெண் வந்திருப்பதாக கூறி அழைத்துள்ளார்.
பின்னர் திலகா வீட்டிற்கு சென்ற சுரேஷ், அங்கிருந்து பெண்ணுடன் உல்லாசமாக இருக்க அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு சுரேஷ் கதவை திறந்து பார்த்த போது 2 பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்து நாங்கள் பாலியல் குற்றத்தடுப்பு போலீசார் என்று தெரிவித்தனர். மேலும் சுரேசிடம் அந்த கும்பல் விபசார வழக்கில் உன்னை கைது செய்யப் போவதாக கூறி மிரட்டி அவர் கையில் இருந்து ரூ.1000 ரொக்கம் மற்றும் ஜி.பே. மூலமாக 44,000 பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.
பின்னர் இளம்பெண்ணை மகளிர் காப்பத்தில் ஒப்படைப்பதாக அழைத்து செல்வதாக கூறி சுரேசை மட்டும் அறையில் வைத்து வெளிப்புறம் தாழிட்டு மீண்டும் வருவதாக கூறி விட்டு கிளம்பி சென்றனர். 20 நிமிடங்கள் கழித்து திலகா வந்து கதவை திறந்த உடன் சுரேஷ் அவரிடம் போலீஸ் குறித்து கேட்டபோது அவர்கள் யார் என்றே தெரியாது என தெரிவித்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சுரேஷ் இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குறிப்பாக திவ்யா என்ற பெண் விலைமாதராக நடித்து சுரேஷ்சை உல்லாசத்திற்கு வரவழைத்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் திவ்யாவின் கூட்டாளிகளான பெரவள்ளூர் ஜவஹர் காலனியை சேர்ந்த பிரகாஷ், பேட்டேரியை சேர்ந்த சசிகலா, கொளத்துாரை சேர்ந்த சரளா ஆகியோர் போலீஸ் போல் நடித்து சுரேஷ்சை மிரட்டி பணம் பறித்து செனறது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் தென்காசி பகுதியை சேர்ந்த தருண்ராஜ் என்பவர் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. குறிப்பாக இவர் பெண்களிடம் உல்லாசமாக இருக்க விரும்பும் ஆண்களை குறித்து வைத்து அவர்களை உல்லாசத்திற்கு வரவழைப்பதும் பின்னர் இதே கும்பலை சேர்ந்தவர்கள் போலீஸ் போல் நடித்து பணம் பறித்தும் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் போலீசார் பிரகாஷ், சசிகலா, சரளா ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள திவ்யா, தருண்ராஜ் ஆகிய இருவரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பாக தனிப்படை போலீசார் தருண்ராஜை பிடிக்க தென்காசி விரைந்துள்ளது.