சொரியாசிஸ் நோயைப் பொறுத்தவரை, நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் அதிகப்படியான வீக்கம், அதீத உணர்திறன் மற்றும் அலர்ஜி ஏற்படுவதற்கான காரணிகள் அனைத்தும், உடலுக்கு வெளியிலிருந்தும் உள்ளிலிருந்தும் மிக வேகமாகத் தூண்டப்படுகின்றன.
பொதுவாக, சித்த மருத்துவத்தில் சரும நோய்களுக்குச் சில விஷயங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படும். பாதிக்கப்பட்டவர்களின் உடலுக்கு உணர்திறன் (சென்சிட்டிவிட்டி) அதிகமாக இருக்கும். இதனால் சம்பந்தப்பட்ட நபரின் நோய் எதிர்ப்பு சக்தி சின்ன விஷயங்களுக்குக்கூட உடனடியாகப் பாதிக்கப்படும். எனவே, உணவில் முக்கியமாக இனிப்பு, புளிப்பு, உப்பு ஆகிய மூன்றையும் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்.

அதிக இனிப்பு சேர்க்கப்பட்ட பொருள்களான வெள்ளைச் சர்க்கரை மற்றும் அதிக இனிப்பு கொண்ட குளிர்பானங்கள் ஆகியவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எப்போதும் புளிக்குழம்பாக வைத்துச் சாப்பிடுவது, புளிப்பான பழங்களை அடிக்கடி சாப்பிடுவது, புளிக்க வைத்த உணவுப் பொருள்கள், குளிரூட்டிப் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரசாயனப் பதப்படுத்திகள் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பேக்கரி உணவுப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
சித்த மருத்துவர் வரலட்சுமி:
சென்னை, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் பணிபுரிகிறார். இத்துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.