பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் காரில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் ராஜ்ரப்பா கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை நேரத்தில் கார் ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் ராஞ்சி-பாட்னா நெடுஞ்சாலையில் சென்ற போது முன்னால் சென்ற பெரிய கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
கனரக வாகனம் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டது. கார் அதன் மீது மோதியதா அல்லது கனரக வாகனம் கார் மீது மோதியதா என்பது குறித்து தெளிவாகத் தெரிய வில்லை. விபத்து குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களும் விரைந்து வந்து விபத்தில் சிக்கி இருந்தவர்களை காரில் இருந்து வெளியில் எடுக்க உதவி செய்தனர்.
காரில் 14 பேர் பயணம் செய்தனர். காயம் அடைந்த அனைவரும் ராம்கர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை டாக்டர்கள் சோதித்தபோது 13 பேர் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.
ஒருவர் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பி இருக்கிறார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்தவர்களில் 4 பேர் குழந்தைகள் ஆவர். காரில் பயணம் செய்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த விபத்து குறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் மாநில ஆளுநர் ஆகியோர் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்து இருப்பதோடு இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா ரூ.2 லட்சம் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.