
குதிரை பேரம் தொடர்பாக ஐயூஎம்எல் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷாவின் பேச்சு தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பிய நிலையில், குதிரை பேரம் நடந்தது யார் மூலம்? எம்.எல்.ஏக்கள் எங்கே தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்? என்ற கேள்விகளுக்கு சட்டப்பேரவையிலேயே பதிலடி கொடுத்திருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
திருவண்ணாமலையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா, தன்னையும் அமைச்சர் ஷாஜகானையும் சிலர் அணுகி ஆதரவு கேட்டு பணம் தர முன்வந்ததாக தெரிவித்திருந்தார்.
“கோடி… கோடியாக பணம் கொண்டு வந்து, எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்… கையெழுத்துப் போடுங்கள் என்று கேட்டார்கள். அமைச்சர் பதவியும் தருகிறோம் என்றார்கள். ஆனால், நாங்கள் பணத்துக்கு சாய்ந்தவர்கள் இல்லை.. கொள்கைக்காக நிற்பவர்கள்” என அவர் பேசியிருந்தார்.
இந்தப் பேச்சு வெளியானதும், ‘ஐயூஎம்எல் எம்.எல்.ஏக்களை இழுக்க முயன்றது தவெகதானா?’ என்ற அரசியல் விவாதம் எழுந்தது. திமுக தரப்பிலிருந்தும் தவெக மீது குதிரை பேரம் தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்தச் சூழலில் இன்று(செப்.,07) சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அந்தக் குற்றச்சாட்டை அப்படியே மறுத்ததோடு, குதிரை பேர விவகாரத்தை திமுக பக்கமே திருப்பியுள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ், ஐயூஎம்எல், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடன் அரசியல் ரீதியாக பேசியதாக கூறிய ஆதவ் அர்ஜுனா, எந்தவொரு எம்.எல்.ஏவையும் தனிப்பட்ட முறையில் அணுகி ஆதரவு கேட்கவில்லை என விளக்கம் அளித்தார்.
அதோடு, “குதிரை பேரம் நடத்தியது யார் என்பது தெரியும்” எனக் கூறிய அவர், அதற்கான முக்கிய இடத்தையும் சுட்டிக்காட்டினார். ஐயூஎம்எல் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படும் அக்கார்டு ஓட்டல், திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது என சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
தொடர்ந்து, ஓட்டலில் அவர்கள் தங்கியதன் பின்னணி என்ன? யார் அவர்களை அங்கு அழைத்துச் சென்றார்கள்? அங்கு அரசியல் பேரம் தொடர்பாக ஏதேனும் பேச்சுவார்த்தை நடைபெற்றதா? என்பதையெல்லாம் விசாரிக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தினார்.
மேலும், “இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது விசாரணைக்குப் பிறகு வெளியிடப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால், ஏற்கெனவே பரபரப்பாக இருந்த குதிரை பேரம் விவகாரம் தற்போது ‘ஓட்டல் எபிசோடு’ என்ற புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது.
ஒருபக்கம், ஐயூஎம்எல் எம்.எல்.ஏக்களை பணம் கொடுத்து இழுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு. மறுபக்கம், “அவர்கள் தங்கிய ஓட்டலே திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுடையது” என ஆதவ் அர்ஜுனா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு. அப்படியானால் அந்த ஓட்டலில் நடந்தது என்ன? எம்.எல்.ஏக்கள் அங்கு எப்படி சென்றார்கள்? அவர்களை தங்க வைத்தது யார்? குதிரை பேரத்துக்கும் அந்த ஓட்டலுக்கும் தொடர்பு இருக்கிறதா? ஆதவ் அர்ஜுனா கிளப்பியிருக்கும் இந்தக் கேள்விகளுக்கு, விசாரணைக்குப் பிறகுதான் விடை கிடைக்குமா?
தமிழக அரசியலில் இப்போது இதுதான் அடுத்த பரபரப்பு!