ஜென் ஸீ vs மூத்த தலைமுறை…ஜென் ஸீக்களின் அலுவலக கலாசாரம்! – Kumudam

Spread the love

பார்ட் -5

– மித்ரன்

ஜென் ஸீ தலைமுறையினருக்கு 90s கிட்ஸோ, 80s கிட்ஸோ மேலதிகாரியாக வேலை செய்யும்போது,   முக்கியமான சில   மனப்பான்மைகளைப் பார்க்க முடிகிறது என்கிறார் ஒரு பிரபல பன்னாட்டு  மென் பொருள் நிறுவன இயக்குநர் .

ஒரு துறையை, அல்லது ஒரு வேலையை தேர்ந்தெடுக்கும் போது, 80s கிட்ஸ்கள் 25 வருடங்களுக்காவது அதில் நிலைத்து நிற்பதைப் பற்றி திட்டமிடுவார்கள். “இதுக்காகத்தான் நான் படிச்சேன், இந்த துறைக்குள்ள வந்துட்டேன், இவ்வளவு வருஷம் வேலை செஞ்சுட்டேன். 

அதனால இதுலயே என் வாழ்க்கைப் பயணத்தை முடிச்சுக்கறேன்” எனும் மனப்பான்மை ஒரு கட்டத்தில் அவர்களுக்கு வந்துவிடும் அதனாலேயே அந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒரே நிறுவனத்தில் ஆண்டுக் கணக்கில் வேலையில் இருப்பார்கள். சில 90s கிட்ஸ்களுக்கும் அந்த மனப்பான்மை இருக்கும்.

ஆனால் ஜென் ஸீ தலைமுறையினர் பெரும்பாலும் அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரு துறையிலோ அல்லது வேலையிலோ இருப்பதில்லை. “நான் இதுக்காக படிச்சேன், இதுக்குள்ள நான் போறேன். என்னோட விருப்பங்களும், சவுகரியங்களும் பாதிக்கப்படாத வரை நான் இந்த துறையில் இருப்பேன்.  ஏதாவது ஒரு கட்டத்தில் இது சரிவராது என்று தோன்றினால், நான் துறையை மாற்றிக்கொள்வேன்” என்பது அவர்களின் மனநிலையாக இருக்கிறது.

அவர்களின் இந்த மனப்பான்மையால்,  இனி  ஆண்டுக்கணக்கில் ஒரே நிறுவனத்திலோ அல்லது ஒரே வேலையிலோ இருப்பவர்களை பார்ப்பது அரிதாகிவிடும். குறிப்பாக 2000-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள், 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு மேல் ஒரே துறையில் இருப்பது சாத்தியமில்லாததாக மாறி வருகிறது என்கிறார் பிரபல பன்னாட்டு மென்பொருள் நிறுவன இயக்குனர்.

ஒருவகையில் அவர்கள் சுதந்திரமாக இருப்பதாக நாம் நினைக்கலாம். ஆனால் நாட்டின் பொருளாதாரத்துக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அது பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தலாம். குறிப்பாக ஒரு துறையில் ஒரே நபர் பல ஆண்டுகள் இருந்தால், அவர்கள் அதில் நிபுணத்துவம் பெறுவார்கள்.

இதன்மூலம் ஒருபக்கம் உற்பத்தி அதிகரிக்க, மறுபக்கம் அவர்கள் செய்யும் வேலையில் நேர்த்தியும் கூடும். ஆனால் ஓரிடத்திலேயே இருக்காமல்  அலைபாய்வதால், அவர்களால் எந்த துறையிலும் நிபுணத்துவம் பெறமுடியாமல் போய்விடும்.  

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *