டாடா குழுமத்தில் அடிக்கும் மெகா புயல்.. பதவி விலகினார் நோயல் டாடா.. ஒரே நாளில் அதிரடி அறிவிப்புகள்! | Noel Tata Steps Down as Tata Investment Chairman; Param Vakil Takes Charge, What it means for Tatas

Spread the love

Business

oi-Vigneshkumar

மும்பை: டாடா குழுமத்தின் முக்கிய முதலீட்டு நிறுவனமான டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் பதவிகளில் இருந்து நோயல் டாடா விலகியுள்ளார். அந்த நிறுவனத்தின் தலைவராக 16 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு வகித்த அவர், தற்போது சேர்மேன் எமரிட்டஸ் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரபல ஏஇசட்பி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான பரம் வக்கீல் புதிய தலைவராக பொறுப்பேற்கிறார்.

டாடா நிறுவனத்தில் ரத்தான் டாடா மறைவுக்கு பிறகு ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வருகிறது. இது செய்திகளிலும் பெரியளவில் விவாதமாக மாறி வருகிறது. இப்போதும் அப்படியொரு மாற்றம் தான் மீண்டும் நடந்திருக்கிறது.

Noel Tata Steps Down Noel Tata Tata

நோயல் டாடா பதவி விலகல்

அதாவது டாடா குழுமத்தின் முக்கிய முதலீட்டு நிறுவனமான டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் பதவிகளில் இருந்து நோயல் டாடா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரபல கார்ப்பரேட் வழக்கறிஞரான பரம் வக்கீல் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நோயல் டாடாவுக்கு சேர்மேன் எமரிட்டஸ் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 12 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. டாடா குழுமத்தின் நிர்வாக வழிகாட்டுதலின்படி, நிர்வாகம் சாராத இயக்குநர்கள் 70 வயதை எட்டும்போது ஓய்வு பெற வேண்டும். நோயல் டாடா இந்த மாதம் 70 வயதை எட்டியுள்ளதால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

கடந்து வந்த பாதை

நோயல் டாடா கடந்த 2004ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைந்தார். பின்னர் 2010 ஜூன் 24ம் தேதி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இந்த சூழலலில் தான் நேற்று நவம்பர் 11ம் தேதி தலைவர் மற்றும் இயக்குநர் பதவிகளில் இருந்து அவர் விலகுவார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது தலைமையில் நிறுவனம் பல முக்கிய மைல்கற்களை எட்டியதுடன், நீடித்த வளர்ச்சியை உருவாக்கியுள்ளதாக டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் பாராட்டியுள்ளது.

யார் இந்த பரம் வக்கீல்?

நோயல் டாடாவுக்கு பதிலாகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பரம் வக்கீல், இந்தியாவின் முன்னணி சட்ட நிறுவனங்களில் ஒன்றான AZB & Partnersன் இணை நிறுவனர்களில் ஒருவர். கார்ப்பரேட் மறுசீரமைப்பு, திவால் நடைமுறைகள், உள்கட்டமைப்பு மற்றும் திட்ட நிதி உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.

பல ஆண்டுகளாக டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷனுடன் தொடர்பில் இருக்கும் இவர், 2026 மார்ச் மாதம் நிறுவனத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்தியாவின் திவால் சட்டம் உள்ளிட்ட நிதி மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான குழுக்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

இதர நியமனங்கள்

இதற்கிடையே நியோஸ்ட்ராட் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அபிசர் ஷபீர் திவான்ஜி, டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷனின் கூடுதல் நிர்வாகம் சாராத இயக்குநராக ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் இன்று நவம்பர் 12 முதல் அமலுக்கு வருகிறது. மற்ற ஷேர் ஹோல்டர்ஸ்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகு இது செயல்படுத்தப்படும். இதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களில் நிதி சேவைகள் பிரிவுகளுக்கு தலைமை வகித்துள்ள திவான்ஜிக்கு, நிறுவன மறுசீரமைப்பு துறைகளில் சுமார் 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

மற்ற நிறுவனங்கள்

டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் மட்டுமின்றி, டாடா குழுமத்தின் பிற நிறுவனங்களிலும் நோயல் டாடா தனது தலைவர் பதவிகளில் இருந்து விலகி வருகிறார். ட்ரென்ட், வோல்டாஸ் மற்றும் டாடா இன்டர்நேஷனல் நிறுவனங்களின் தலைவர் பொறுப்புகளிலிருந்தும் அவர் விலகுகிறார். அவருக்கு பதிலாக ட்ரென்ட் நிறுவனத்தின் தலைவராக பரம் வக்கீலும், வோல்டாஸ் நிறுவனத்தின் தலைவராக சுனில் டி’சூசாவும், டாடா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவராக டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குநர் டி.வி. நரேந்திரனும் பொறுப்பேற்க உள்ளனர்.

இருப்பினும், நோயல் டாடா தொடர்ந்து டாடா டிரஸ்ட்ஸ் தலைவராகவும், டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸில் டாடா டிரஸ்ட்ஸ் சார்பிலான இயக்குநராகவும் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *