நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் இல்லம் அருகே நேற்று (ஜூலை. 22) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை குண்டுகட்டாகத் தூக்கி சென்று காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் உடன் இருந்த காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இதனைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், ” நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!பாரதியாரின் இந்த வரிகள்தான் இன்று என் நினைவுக்கு வருகின்றன.
இந்நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் வாழ்வோடு விளையாடும் கொடுமையைக் கண்டும் நாம் அமைதி காக்க முடியாது. அறவழியில் உரிமை கேட்கும் எங்கள் தலைவர்களையும், தொண்டர்களையும் தெருக்களில் இழுத்துச் சென்று ஆட்சியின் ஒடுக்குமுறையை ஏவிவிட்டால், எங்கள் அறக்குரல் ஒடுங்கிவிடும் என ஆளுங்கட்சி எண்ணுவது ஒரு வரலாற்றுப் பிழை.
திரு. ராகுல் காந்தி, திருமதி. பிரியங்கா காந்தி மற்றும் எங்கள் தோழர்கள் மீது ஏவப்பட்ட காவல் துறையின் வன்முறையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தூய்மையான தேர்வுக் களத்தை ஊழல் களமாக மாற்றிய மாபெரும் முறைகேடுகளுக்கு அறத்தின் அடிப்படையில் பொறுப்பேற்று, ஒன்றிய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் உடனடியாகத் தனது ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும்.
மாணவர்களுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் வரை, நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் எங்கள் அறப்போர் ஒருபோதும் ஓயாது” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.