தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.21 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதில் ரயில் நிலையத்துக்குள் உள்ளே செல்ல ஒரு வழியும், வெளியே செல்ல ஒரு வழியும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவதாக உள்ள ஒரு வழியில் உள்ள கட்டடத்தின் முகப்பு பகுதியின் மேல் பெரிய கோயில் போன்று மாதிரி கோபுரம் நிறுவப்பட்டது.

இந்தநிலையில் ரயில்வே நிர்வாகம் நேற்று முன்தினம் “தஞ்சாவூர் சந்திப்பு” என்ற எழுத்துகளை, தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதி அதனை, பயணிகள் வெளியே வரும் கட்டடப் பகுதியில் பொருத்தியது. இதில் பெரிய கோயில் மாதிரி போன்ற தோற்றமுடைய கட்டடப் பகுதியில் இந்தி எழுத்துகளை, ரயில்வே நிர்வாகம் பொருத்தியது. இதனால் பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசியல் அமைப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்து கண்டனம் தெரிவித்ததுடன் இந்தி எழுத்துக்களை எடுத்து விட்டு தமிழில் வைக்க வேண்டும் என்றனர். இதை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.