தனியாக அழுதேன்.. 981 நாட்களாக நரக வேதனை.. பிரேசில் அணிக்காக கண்ணீருடன் கம்பேக் கொடுத்த நெய்மர்! | Neymar: After 981 days of Neymar Long Injury Layoff, Now Takes the Field for Brazil in 3-0 Win Over Scotland

Spread the love

Sports

oi-Yogeshwaran Moorthi

டல்லாஸ்: பிரேசில் சூப்பர் ஸ்டார் வீரரான நெய்மர் சுமார் 981 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பிரேசில் தேசிய அணிக்காக தடம் பதித்துள்ளார். ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 15 நிமிடங்களில் நெய்மர் களமிறங்கிய போது, ரசிகர்கள் நெகிழ்ச்சியில் உற்சாக கோஷம் எழுப்பினர்.

2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் குரூப் ‘சி’ பிரிவில் ஸ்காட்லாந்துக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் பிரேசில் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் வென்றால் பிரேசில் அணி எளிதாக இந்த பிரிவில் முதலிடத்தை முடிக்கும். இந்த போட்டியின் 76வது நிமிடத்தில் மாற்று வீரராக நெய்மர் களம் புகுந்தார். இப்போட்டியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Neymar

கடுமையான காயங்கள் மற்றும் நீண்ட கால ஓய்வுக்குப் பின் அவர் மைதானத்திற்குள் நுழைந்தபோது, மியாமி மைதானத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தப் போட்டியில் பிரேசில் அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே முழு ஆதிக்கம் செய்தது.

ஆட்டத்தின் 7வது மற்றும் 45வது நிமிடங்களில் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் அடுத்தடுத்து 2 அபார கோல்களை அடித்து பிரேசில் அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். தொடர்ந்து இரண்டாவது பாதியில், 60வது நிமிடத்தில் மேதியூஸ் குன்ஹா பிரேசில் அணியின் 3வது கோலை அடித்தார்.

பிரேசில் அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது, ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் மேதியூஸ் குன்ஹாவிற்கு மாற்றாக 10ஆம் எண் ஜெர்சி அணிந்து நெய்மர் மைதானத்திற்குள் நுழைந்தார். 2023 அக்டோபரில் ஏற்பட்ட கடுமையான முழங்கால் காயம், அதைத்தொடர்ந்து கடந்த மாதம் ஏற்பட்ட தசைநார் காயம் என கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த நெய்மருக்கு இந்த கம்பேக் மிகவும் உணர்வுப்பூர்வமானதாக அமைந்தது.

சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மைதானத்தில் இருந்த நெய்மர், சில அசாத்தியமான பாஸ்களை செய்து ரசிகர்களை மகிழ்வித்தார். அவரது ஒரு பலமான ஷாட்டை ஸ்காட்லாந்து கோல்கீப்பர் அங்கஸ் கன் போராடி தடுத்தார் ஆட்டம் முடிவடைந்ததும் மைதானத்திலேயே சக வீரர்களைக் கட்டிப்பிடித்து நெய்மர் கண் கலங்கி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து நெய்மர் பேசுகையில், நான் ஓய்வறைக்குச் சென்று தனியாக அமர்ந்து சில நிமிடங்கள் கண்ணீர் விட்டேன். மீண்டும் எனது நாட்டின் சீருடையை அணிந்து விளையாட கடவுள் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறுகிறேன். இவ்வளவு காலம் கால்பந்து மைதானத்தை விட்டு தூரமாக இருந்தது நரக வேதனையாக இருந்தது. தற்போது மீண்டு வந்தது நிம்மதி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *