தமிழ்நாட்டில் தொடரும் மழை… சென்னையில் இன்றைய வானிலை எப்படி? – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு லேசான மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் குளிரும், பகல் நேரங்களில் வறண்ட வானிலையும் காணப்படுகிறது. இந்த நிலையில், கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவின் தெற்குப் பகுதிகளிலிருந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் வழியாக கடலோர கர்நாடகா வரை வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 30-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

திருப்பூர், கடலூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 1-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. இந்தக் காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை ஒட்டியே பதிவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நவம்பர் 29-ஆம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி உருவாகும் எனவும், அது 30-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருமாறி, டிசம்பர் 2-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை குமரிக்கடல் பகுதியிலிருந்து தமிழ்நாடு மற்றும் கேரளம் வழியாகத் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடையில் கடுமையான வெப்பம் நிலவியது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையிலும், போதுமான மழை கிடைக்காதது மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கினாலும், அதன் தாக்கம் குறைவாகவே உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *