தவெக அரசு Vs டாஸ்மாக் ஊழியர்கள் – என்னதான் பிரச்னை?!

Spread the love

தமிழ்​நாடு முழு​வதும் காலி மது​பானப் பாட்​டில்​களைத் திரும்​பப் பெறும் திட்டத்​தைச் செயல்​படுத்​து​வதற்கு எதிராக டாஸ்மாக் ஊழியர்​கள்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகப் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஊழியர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு விளக்கம் கேட்கும் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டதோடு, 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சஸ்பெண்டும் செய்யப்பட்டிருக்கின்றனர். அரசின் இத்திட்டம் குறித்து ஊழியர்களின் நிலைப்பாடு என்ன? களத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிரமங்கள் என்னென்ன? என்பது குறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க (AITUC) மாநிலத் தலைவர் நா.பெரியசாமியிடம் கேட்டறிந்தோம்.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க (AITUC) மாநிலத் தலைவர் நா.பெரியசாமி
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க (AITUC) மாநிலத் தலைவர் நா.பெரியசாமி

நடைமுறைச் சிரமங்கள் என்ன?

நம்மிடம் பேசிய அவர், “தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் அவர்கள் டாஸ்மாக் ஊழியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ. 33,000 வரை உயர்த்தித் தருவதாக உறுதியளித்தார். அந்த ஊதிய உயர்வு கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்களுக்குக் கிடைக்கத் தொடங்கிவிட்டது.

இது தவிர, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை, மாதத்திற்கு இரு நாள்கள் விடுப்பு எடுக்கும் உரிமை, பண்டிகைக் கால முன்பணம் போன்ற அறிவிப்புகளும் விரைவில் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன. எனினும், தற்போது நிலவும் போராட்டம் என்பது எந்தவொரு தொழிற்சங்கத்தாலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட போராட்டம் அல்ல; தங்களுக்கு ஏற்படும் நடைமுறைச் சிரமங்கள் காரணமாக ஊழியர்கள் தாமாக முன்வந்து ஈடுபடும் போராட்டமே…

காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மது பாட்டிலின் MRP விலையிலேயே காலி பாட்டிலுக்கான தொகையாக ரூ.10 இணைக்கப்பட்டு அச்சிடப்பட்டு விற்கப்படுகிறது (உதாரணமாக ஒரு மது பாட்டிலின் விலை ரூ. 140 என்றால், காலி பாட்டிலுக்கான ரூ.10 தொகையையும் சேர்த்து ரூ.150 என MRP-லேயே நிர்ணயம் செய்யப்பட்டு அச்சிடப்படுகிறது).

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வீண் மனக்கசப்பு

அரசு வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை விரும்பியதால், 90% ஊழியர்கள் தங்களை மாற்றிக்கொண்டு MRP விலையிலேயே பாட்டில்களை விற்று வந்தனர். ஆனால், தற்போதைய புதிய முறையின் கீழ் ஒரு பாட்டிலுக்கு மது பாட்டில் பார்ஃகோட்,MRP விலை, காலி பாட்டில் ஹோலோகிராம் வில்லை என 3 முறை கட்டாயமாக ஸ்கேன் செய்ய வேண்டியுள்ளது. POS சாதனங்களில் நிலவும் நெட்வொர்க் கோளாறுகள் மற்றும் தாமதத்தால் பில்லிங் செய்ய அதிக நேரம் ஆகிறது. இதனால் கடைகளில் கூட்டம் சேர்ந்து, வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வீண் மனக்கசப்பும் பதற்றமும் உருவாகிறது.

கோணிப்பைகள் கொடுக்கவில்லை

மேலும், திரும்பப் பெறும் காலி பாட்டில்களைச் சேகரிக்க முறையான கோணிப்பைகள் வழங்கப்படவில்லை. பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் 10×10 என்ற சிறிய அளவில் மட்டுமே இருப்பதால், சேகரிக்கப்படும் பாட்டில்களை அடுக்கி வைக்கக் கடைகளில் போதிய இடவசதியும் இல்லை. காலி பாட்டில் சேகரிக்கும் கூடுதல் பணிக்காக நாளொன்றுக்கு சென்னை மாநகராட்சிப் பகுதியில் ரூ. 1,000, இதர மாநகராட்சிகளில் ரூ. 600, நகராட்சிகளில் ரூ. 800, ஊரகப் பகுதிகளில் ரூ. 750 என ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. பாட்டில்களின் எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டினால் இந்தத் தொகை இரட்டிப்பாக (ரூ. 2,000) வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

மிகுந்த பணிச்சுமையில் ஊழியர்கள்

இருப்பினும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 4,048 டாஸ்மாக் கடைகளில் மொத்தம் 22,400 சில்லறைப் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். அதாவது, ஒரு கடைக்குச் சராசரியாக 3 முதல் 4 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். நாளொன்றுக்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை விற்பனையாகும் பெரிய கடைகளில், இந்த ஆள்ப் பற்றாக்குறையினாலும் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இன்மையினாலும் ஊழியர்கள் மிகுந்த பணிச்சுமைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

கால அவகாசம் தேவை

அரசின் ஊழலைத் தடுக்கும் நல்நோக்கத்திலான முடிவை தொழிற்சங்கங்கள் முழுமையாக வரவேற்கின்றன; ஆனால் இத்திட்டத்தைச் சீராகச் செயல்படுத்தத் தேவையான கூடுதல் கருவிகள், விரைவான நெட்வொர்க் வசதி, கூடுதல் ஆட்களை நியமித்தல் மற்றும் கால அவகாசம் ஆகியவை மிக அவசியமாகும். இது குறித்து நேற்று அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளோம்.

அமைச்சர் விக்னேஷ்
அமைச்சர் விக்னேஷ்

சஸ்பென்ஷனைத் திரும்ப பெற வேண்டும்!

போராட்டத்தில் ஈடுபட்ட 360-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் எடுக்கப்பட்ட சஸ்பென்ஷன் (பணி இடைநீக்கம்) நடவடிக்கைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட விளக்கம் கேட்கும் நோட்டீஸ் ஆகியவற்றை அரசு திரும்பப் பெற வேண்டும். எந்தவித பதற்றமும் இன்றிப் பணியாளர்கள் சீராகப் பணிபுரியும் சூழலை அரசு உருவாக்க வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *