தவெக: `ஆதரவு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் சிக்கல்தான்' – அதிமுக-வில் என்னதான் நடக்கிறது?

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. விஜய் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார்.

ஆனால் அவர் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 பேரின் ஆதரவு தேவைப்படும் சூழல் உள்ளது. இந்தச் சூழலில்தான் தேர்தலில் 3- வது இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுக-விடம்  தவெக ஆதரவு கேட்டிருப்பதாகத் தகவல் வெளியானது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்

எம்.எல்.ஏ-க்களின் முரண்பாடு

நேற்று (மே.6) எடப்பாடி பழனிசாமியின் பசுமைவழிச் சாலை இல்லத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒ.எஸ்.மணியன் தரப்பு தவெக-வுக்கு ஆதரவு தரவே தேவையில்லை எனவும், சி.வி சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தரப்பு அமைச்சரவையில் இடம் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆதரவு தருவோம் எனவும், இன்னொரு தரப்பு நிபந்தனையற்ற ஆதரவு தரலாம் எனவும் விவாதித்ததாக தகவல் வெளியானது. 

கே.பி.முனுசாமியின் விளக்கம்

ஆனால் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கே.பி.முனுசாமி பசுமைவழிச் சாலை இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தவெக-வுக்கு அதிமுக ஆதரவு என பல்வேறு செய்திகள் வெளியாகி விவாதிக்கப்பட்டு வருகிறது.

அது முற்றிலும் தவறான செய்தி. அதிமுக மிகப்பெரிய இயக்கம். சீரோடும், சிறப்போடும் செயல்படும் இந்த இயக்கத்திலிருந்து எந்தச் சூழலிலும் தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை. இதை எடப்பாடியாரின் அனுமதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

அதிமுக-வில் என்ன தான் நடக்கிறது?

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எதிரெதிர் துருவங்களான திமுக-வும் அதிமுக-வும் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடும் என்ற புதிய வதந்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, திடீர் திருப்பமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் நேற்றிரவு புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்குத் திரளாகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். தற்போது எடப்பாடி பழனிசாமி அவர்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள, புதுச்சேரிக்குப் புறப்பட்டிருக்கிறார்.

பல அதிர்வுகளைத் தரும் அதிமுக-வில் என்ன தான் நடக்கிறது… அந்தக் கட்சியின் முடிவு எப்படியாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள மூத்த பத்திரிகையாளர் நாதனைத் தொடர்புகொண்டு பேசினோம்.

அதிமுக-வில் பிளவு?

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “அதிமுகவில் தற்போது பெரும் குழப்பம் நிலவி வருகிறது. சி.வி.சண்முகம் தலைமையிலான ஒரு தரப்பினர் நிபந்தனையுடன் கூடிய ஆதரவை (அமைச்சர் பதவி கேட்டு) வழங்கலாம் எனப் பேசுகின்றனர்.

மற்றொரு தரப்போ நிபந்தனையற்ற ஆதரவு அல்லது வெளியிலிருந்து ஆதரவு பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், கே.பி.முனுசாமி போன்ற மூத்த தலைவர்கள் யாருக்கும் ஆதரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இந்த முரண்பட்ட கருத்துக்களால் எம்.எல்.ஏ-க்கள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. 

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் சவால்கள்

எடப்பாடி பழனிசாமிக்கு இது தொடர்ச்சியான 12-வது தோல்வியாகும். அடுத்த சட்டமன்றத் தேர்தல் 2031-ல் தான் வரப்போகிறது என்பதால், அதுவரை கட்சி சிதறாமல் இருக்குமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தன்னிடம் இரட்டை இலை சின்னமும், பொதுச்செயலாளர் பதவியும் இருப்பதால் கட்சியைக் கட்டுக்குள் வைத்துள்ளதாக நினைக்கிறார்.

ஆனால், ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்துவிட்ட எம்.எல்.ஏ-க்கள், அதிகாரத்தில் பங்கு பெறவே விரும்புகிறார்கள். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தால், அதிமுக என்ற தனித்துவத்தை இழந்து விஜய்யின் பின்னால் செல்ல நேரிடும் என்பது எடப்பாடியின் கவலையாக இருக்கிறது.

தற்போது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக்கூட அதிமுக இழந்து நிற்பது அக்கட்சிக்கு ஒரு மிகப்பெரிய அடையாள நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அமித் ஷாவின் எதிர்ப்பு

தவெக-விற்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதை அமித் ஷா விரும்பவில்லை. அந்த எரிச்சலால்தான் ஆளுநர் ஆட்சி அமைக்க அனுமதிப்பதில் தாமதம் காட்டுகிறார் என்று சொல்லப்படுகிறது.

தமிழக அரசியல் சூழலில் அமித் ஷா மற்றும் பாஜக-வின் முடிவுகளே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றன. அதேசமயம், திமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே பாஜக-வின் முக்கிய நோக்கம்.

எனவே, அதிமுக தவெக-விற்கு ஆதரவு அளித்தால் அதற்கு பாஜக முட்டுக்கட்டை போடாது. அமித் ஷாவிடம் எடப்பாடி அல்லது சி.வி.சண்முகம் யார் சம்மதம் வாங்குகிறார்களோ, அதைப் பொறுத்தே அடுத்தகட்ட நகர்வுகள் அமையும்.

அமித்ஷா
அமித்ஷா

திணரும் அதிமுக தலைமை

மொத்தத்தில், அதிமுக தவெக-வை ஆதரித்து ஆட்சியில் பங்கெடுத்தாலும் அல்லது பிரிந்து தனித்து நின்றாலும், அக்கட்சிக்குச் சரிவு நிச்சயம் என்பது போன்ற சூழல் நிலவுகிறது.

2029 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டுமானால் திமுக மற்றும் தவெக-வுடன் போட்டி போட வேண்டும். ஆனால், ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள அதிமுக, அடுத்த ஐந்து ஆண்டுகள் அதிகாரத்தில் இல்லாமல் இருந்தால் முழுமையாகக் கரைந்து போக வாய்ப்புள்ளது.

எனவே, ஆற்றிலும் கால் வைக்க முடியாமல் சேற்றிலும் கால்வைக்க முடியாமல் திணறிவருகிறது அதிமுக தலைமை” என்று களநிலவரத்தை எடுத்துரைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *