அலர்ஜி, சைனஸ் தொற்று, காதை அடைத்துக்கொண்டிருக்கும் மெழுகு என இந்தப் பிரச்னைக்கு இதெல்லாம் காரணமாக இருக்கலாம் என்ற யூகத்தில் இதை அலட்சியம் செய்தால், பிரச்னை தீவிரமாகும்போது, சிகிச்சை அளிப்பதில் சிரமமும் பலனில்லாமல் போவதும் நடக்கும்.
திடீர் காது கேளாமை பிரச்னைக்குள்ளாவோரில் பத்தில் ஒன்பது பேருக்கு ஒரு காதில் மட்டும் பாதிப்பு ஏற்படுகிறது. பாதிப்புக்குள்ளாவோரில் பலரும் காலையில் தூக்கத்தில் இருந்து எழும்போது இந்தப் பிரச்னையை உணர்ந்ததாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர், போன் பேசும்போது ஒரு காதில் கேட்கும் திறன் இழப்பை உணர்ந்ததாகச் சொல்கிறார்கள்.

இன்னும் சிலர், கேட்கும் திறனை இழப்பதற்கு முன்பாக சத்தமான, அலாரம் போன்ற ஒலியைக் கேட்டதாகச் சொல்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் ஒன்றிரண்டு வாரங்களில் ஓரளவுக்கோ அல்லது முழுமையாகவோ கேட்கும் திறன் திரும்ப வருகிறது. தாமதிக்காமல் சிகிச்சை எடுப்போரில் இந்த மாற்றத்தை அதிகம் பார்க்க முடிகிறது. சளி, தொண்டைவலி போன்ற தொற்றுகள், வயது முதிர்வு, அதிக சத்தத்துக்கு உள்ளாவது, சில மருந்துகள் உட்கொள்ளுதல் போன்றவை பரவலான காரணங்கள். ஆனால், இவற்றால் வரும் காது கேளாமை பொதுவாக மெதுவாகவே வரும்.