பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர்
நிலத்தடி நீரை நம்பியுள்ள பகுதிகளில் பம்ப் செட்டுகளை இயக்குவதற்காக இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கான மின் இணைப்பைப் பெறுவது தான் உலகில் மிகவும் கடினமான செயலாகும்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 23.56 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 லட்சம் பேர் இலவச மின் இணைப்புக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர்.
இலவச மின் இணைப்பை முன்னுரிமை அடிப்படையில் பெறுவதற்காக தட்கல் திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அவ்வப்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக இணைப்பு வழங்கப்படும்.

உழவர்களுக்கு பெரும் இழப்பு
வேளாண் பம்ப் செட்டுகளுக்கான இலவச மின் இணைப்பு பெறுவதற்காக தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திமுக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 31-ஆம் தேதி வரை 47,554 விவசாயிகள் விண்ணப்பித்தனர்.
அதுமட்டுமின்றி, இலவச மின்சார இணைப்புக்காக 5 குதிரைத்திறன் வரை ரூ. 2.50 லட்சம், 5 முதல் 7.5 குதிரைத்திறன் வரை ரூ. 2.75 லட்சம், 7.5 முதல் 10 குதிரைத்திறன் வரை ரூ. 3 லட்சம், 10 முதல் 15 குதிரைத்திறன் வரை ரூ. 4 லட்சம் வீதம் உழவர்கள் கட்டணம் செலுத்தினர்.
விண்ணப்பித்தவர்களில் முதல்கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு 15 நாள்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. ஆனால், 8 மாதங்களாகியும் ஒரே ஒரு இணைப்பு கூட வழங்கப்படவில்லை.
தட்கல் திட்டத்தின்படி விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் நிலத்தடி நீரைக் கொண்டு குறுவை சாகுபடி செய்திருப்பார்கள். ஆனால், மின்சார இணைப்பு வழங்கப்படாததால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் உழவர்கள் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறார்கள். தட்கல் மின் இணைப்புக்காக 47,554 உழவர்களும் சேர்ந்து சுமார் ரூ. 1250 கோடி முன்பணமாகச் செலுத்தியுள்ளனர்.
இவர்களுக்கு முன்பாக கடந்த 2023-ஆம் ஆண்டில் இதே தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த 12,566 உழவர்கள் ரூ. 250 கோடிக்கும் கூடுதலாக முன்பணம் செலுத்தியுள்ளனர். விண்ணப்பித்த விவசாயிகள் எவரும் கோடீஸ்வரர்கள் இல்லை. அவர்களில் பெரும்பான்மையினர் வட்டிக்குக் கடன் வாங்கித்தான் முன்பணத்தைச் செலுத்தியுள்ளனர்.
அதற்காக வாங்கிய கடனுக்கு வட்டியும் செலுத்த முடியாமல், குறுவை சாகுபடி செய்ய முடியாததால் வருவாயும் ஈட்ட முடியாமல் பெரும் துயரத்தில் விவசாயிகள் ஆழ்ந்திருக்கின்றனர். அவர்களின் கடன் சுமை அதிகரித்திருக்கிறது.