14 வயதில் சிறுமிக்கு பிரசவம்.. பெற்றோர் வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்டதால் அடித்தே கொன்ற கணவர் | Iran tragedy: 14-Year-Old Girl Killed by Husband Days After Childbirth shocking incident revealed

Spread the love

International

oi-Vigneshkumar

தெஹ்ரான்: குழந்தை பெற்ற சில நாட்களிலேயே 14 வயது சிறுமி, தனது 20 வயது கணவரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவத்திற்கு பிறகு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வர அந்த பெண் அனுமதி கேட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த கணவர் அந்த பெண்ணை தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள நாடு ஈரான். இங்குள்ள சட்டங்கள் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. பெண்கள் வெளியே செல்லக்கூடாது, வேலை செய்யவும் கட்டுப்பாடு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இதனால் அங்குள்ள பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.

Iran tragedy Woman violence

14 வயது சிறுமி

இதற்கிடையே ஈரானின் கெர்மான் மாகாணத்தை சேர்ந்த சோகந்த் மோஷ்டரேகி. அவருக்கு வயது வெறும் 14. ஆனால், அதற்குள் அவருக்கு திருமணமாகி, குழந்தையும் பிறந்துள்ளது. பிரசவத்துக்காக அழைத்து செல்லப்பட்டபோது அவர் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக அந்த விபத்தில் இருந்து உயிர் தப்பிய சோகந்த், குழந்தையையும் பத்திரமாக பெற்றெடுத்தார். ஆனால், பிரசவத்துக்கு பிறகு சில நாட்களிலேயே கணவரின் தாக்குதலுக்கு உள்ளான அந்த சிறுமி உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

பிரசவத்திற்கு பிறகு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வர அந்த பெண் அனுமதி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் அந்த பெண்ணை தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. சோகந்த்திற்கு கட்டாய திருமணம் நடந்ததாகவே தெரிகிறது. சோகந்த் அவரது பெற்றோரை தொடர்பு கொள்ளக்கூட கணவர் வீட்டினர் அனுமதிக்கவில்லையாம்.

அடித்து கொலை

கணவர் வெளியே செல்லும்போது, சிறுமியை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் பிரசவத்திற்கு பிறகு பெற்றோர் வீட்டிற்கு செல்கிறேன் என்று கேட்ட ஒரே காரணத்திற்காக அவரை அடித்து கொன்றுள்ளனர். இது தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குடும்பப் பிரச்சினையே கொலைக்கு காரணம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொடூரம்

சோகந்த் உயிரிழந்த அதே நாளில், ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தை சேர்ந்த 21 வயது கர்ப்பிணி பெண் செபிதே ரயீசியும் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் கட்டாய திருமணம் தான் நடந்துள்ளது. செபிதேவையும் அவரது கணவரே அடித்து கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குறிப்பாக கட்டாய திருமணங்கள் ஏற்படுத்தும் ஆபத்துகளையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. மனைவியை கொன்றாலும் கூட பெரும்பாலான வழக்குகளில் கணவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவதில்லை என்றும் இதுவே நிலைமை மோசமாக காரணமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முதல்முறை இல்லை

இதற்கு முன்பும் ஈரானில் இதேபோன்ற அதிர்ச்சிகரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், 19 வயது கர்ப்பிணி பெண் ஹெலியா ஃபத்தாஹி கொலை செய்யப்பட்டார். ஒரு இளைஞருடனான உறவின் மூலம் அந்த பெண் கருவுற்றுள்ளார். இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், அவருக்கு 30 வலிப்பு மாத்திரைகளை கொடுத்து கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

ஈரானில் பெண்களின் உரிமைகள் எந்தளவுக்கு மறுக்கப்படுகிறது என்பதையே இது காட்டும் வகையில் உள்ளதாகவும் அங்குள்ள பெண்கள் பாதுகாப்பாக வாழ உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *