“தளபதி விஜய்தான் அடுத்த பிரதமர்’ என்ற த.வெ.க அமைச்சர்களின் வாய்ப்பாட்டுக்கு, முதல்வரை நேரில் சந்தித்து வாய்ப்பூட்டு போட முயற்சித்தார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர்.
ஆனால், அதன்பிறகும் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி, “பிரதமர் வேட்பாளர் விஜய்தான். 2026-ல் விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமரவைத்த ராகுல் காந்தியே, 2029-ல் பிரதமர் நாற்காலியிலும் அமரவைப்பார்” எனக்கூறி பரபரப்பை பற்றவைத்திருக்கிறார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இவ்விவகாரம் குறித்த நமது கேள்விகளை முன்வைத்தோம்…
“ஆமாம்… கடந்த 2018-ம் ஆண்டு அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது. சோனியா காந்தி கலந்துகொள்ளவிருந்த அந்த கூட்டத்துக்கு ராகுல் காந்தியையும் சர்ப்ரைஸாக வரவழைத்த மு.க.ஸ்டாலின், அதே மேடையில் ‘எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்’ என முன்மொழிந்தார்.
சந்திரபாபு நாயுடு, சரத் பவார், உத்தவ் தாக்கரே, மமதா பானர்ஜி, லல்லு பிரசாத் யாதவ், கெஜ்ரிவால் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் யாருமே ‘ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்’ என எங்கள் தலைவர் பெயரை முன்மொழியாத சூழலிலும் தானே முன்வந்து அறிவித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

அப்போது சந்திர பாபு நாயுடு உள்ளிட்ட சில தலைவர்கள், ‘அவசரப்பட்டுட்டீங்களே… நம்மில் யாராவது ஒருவர்கூட பிரதமர் வேட்பாளராக வந்திருக்கலாமே…’ என எதிர்ப்பு தெரிவித்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதெல்லாம் கடந்தகால வரலாறு.”
“கடந்தகாலத்தில், தி.மு.க கூட்டணியில் இருந்தபோது அங்கேயிருந்த மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு, பெரியசாமி உள்ளிட்டோர் ‘எங்க தளபதியும் பிரதமர் வேட்பாளர்தான்’ என்று எந்தவொரு இடத்திலும் சொல்லவில்லையே… எல்லோருமே அவ்வளவு கட்டுக்கோப்போடும் உண்மையான நட்போடும் இருந்தார்கள்.
குறிப்பாக தி.மு.க தலைவர், அன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ராகுலகாந்தியை பிரதமர் ஆக்கவேண்டும்’ என்று மானசீகமாக முனைப்பெடுத்து எத்தனையோ கூட்டங்கள், பிரசார வியூகங்கள் என மிகக்கடுமையாக உழைத்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போதும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி மிகக்கடுமையான தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து தமிழ்நாடு, புதுச்சேரியில் 40-க்கு 40 என்ற அளவில் வெற்றி வாகையை சூடியது தி.மு.க தலைமையிலான கூட்டணி.

இதுபோன்றதொரு வெற்றியை, காங்கிரஸ் ஆண்டு கொண்டிருக்கும் தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெற்றிருந்தால் அப்போதே ராகுல் காந்தி பிரதமர் ஆகியிருப்பார். ஆனால், மு.க.ஸ்டாலின் அர்ப்பணிப்புடன் செய்த பணியை காங்கிரஸ் கட்சி செய்யத் தவறிவிட்டதோ என்ற வேதனையும் உள்ளுக்குள் இருக்கிறது. ஏனெனில், கூடுதலாக ஒரு 25 எம்.பி-க்கள் கிடைத்திருந்தால்கூட காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஆட்சி மத்தியில் பொறுப்பேற்றிருக்கும்.
தமிழக காங்கிரஸ் தலைவராக நானும் உடனிருந்து பார்த்ததால் இதையெல்லாம் சொல்கிறேன். அப்படியெல்லாம் காங்கிரஸுக்காக உழைத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாங்கள் விசுவாசமாக இல்லையோ என்ற வருத்தம் எனக்கு இப்போதும் இருக்கிறது.”