ஏப்ரல் 5 : சென்னை மாநகர கமிஷனரை (அருண் ஐ.பி.எஸ்) மாற்ற வேண்டும் என கேட்கிறோம். அவரை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் – ஆதவ் அர்ஜூனா (வில்லிவாக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில்)
ஏப்ரல் 6 – “சென்னை கமிஷனர் அருண் அவர்கள் திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நினைப்பில் எந்த அதிகாரியின் பேச்சையும் கேட்காமல் செயல்பட்டு வருகிறார். கொளத்தூரில் அங்கிருந்த காவல் அதிகாரிகள் சென்னை கமிஷனரின் பேச்சை கேட்டுக் கொண்டு தலைவரின் பிரசாரத்துக்கு பாதுகாப்பு கொடுக்கவே இல்லை.

மீண்டும் கரூர் மாதிரி ஒரு சம்பவம் நடக்க வேண்டுமென அருண் திட்டமிட்டு செயல்படுகிறார். சட்டத்தையும் நீதியையும் அருண் ஐ.பி.எஸ் பின்பற்றுவதே இல்லை. சென்னை கமிஷனரை அசாமுக்கு மாற்றிவிடுங்கள்.” – ஆதவ் அர்ஜூனா (வில்லிவாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது)
முதலில் மார்ச் 28 ஆம் தேதியே பெரம்பூரிலிருந்து விஜய் பிரசாரத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அப்போது காவல்துறை அதிகாரிகள் முறையாக அனுமதி கொடுக்கவில்லை என தவெக தரப்பில் குற்றஞ்சாட்டியிருந்தனர். கமிஷனர் அருண் தான் தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு அனுமதி கொடுக்கவிடாமல் அழுத்தம் கொடுப்பதாகவும் விமர்சித்தனர்.
விஜய்யும் இதே காரணத்தை முன்வைத்து அருணை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகாரும் அளித்திருந்தார். இதன்பிறகு, மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் என மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், திட்டமிட்டப்படி பெரம்பூரில் மட்டுமே விஜய் பிரசாரம் செய்தார். கொளத்தூர் பிரசாரத்தை பாதியிலேயே நிறுத்தியவர், வில்லிவாக்கத்துக்கு செல்லாமலேயே தவிர்த்தார்.
இதற்கு காவல்துறையையே குற்றஞ்சாட்டினர். கொளத்தூரில் காவல்துறையினர் முறையாக பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. கமிஷனர் அருண் கரூர் சம்பவம் போன்ற ஒன்றை கொளத்தூரில் நிகழ்த்த நினைத்தார் என வெளிப்படையாகப் பேசினர். இப்படி தேர்தலுக்கு முன்பாக அளுங்கட்சியின் அபிமானியாக இருந்துகொண்டு தங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரியை முக்கியமான பொறுப்பில் அமர்த்தியதே தவெகவின் நிர்வாகிகளே ரசிக்கவில்லை என கிசு கிசுக்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர்.