இன்று தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 234 சட்டமன்ற உறுப்பினர்களில், திமுக வெளிநடப்பு மற்றும் இதர காரணங்களால் 63 பேர் பங்கேற்கவில்லை. மீதமிருந்த 171 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர். இதில், 144 வாக்குகள் ஆதரவாகவும், 22 வாக்குகள் எதிராகவும், நடுநிலை வாக்குகள் 5 வாக்குகள் எனவும் பதிவாகியிருந்தது. இதில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பிளவுபட்டு சி.வி.சண்முகம், எஸ்.பி வேலுமணி ஆதரவு வேட்பாளர்கள் 25 பேர் ஆதரவாகவும், எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ-கள் 22 பேர் எதிராகவும் வாக்களித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக-வின் கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். நேற்று மாலையே தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என வாட்ஸ்அப், மெயில், மெசேஜ் என பல்வேறு வழிமுறைகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்தோம். ஆனால், கொறடாவுக்கு எதிராக, சட்டத்தை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்திருக்கின்றனர். அதிமுக-வின் தலைவர்களை முன்னிலைப்படுத்தி, இரட்டை இலைச் சின்னத்தில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிப்பெற்றவர்கள். அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயல்புதான்.