இங்குள்ள புகழ்பெற்ற “ஸ்வஸ்திக் குளம்’ என்ற சக்கரக்குளத்தின் சிறப்பு, ஒரு துறையில் குளிப்பவா்களை எதிர் துறையில் குளிப்பவா்கள் பார்க்க முடியாது என்பதே. ஸ்வஸ்திக் வடிவ நான்கு புறத்திலும் 52 படிகள்உள்ளன. இக்குளத்தினை `நாலு மூலைக்கேணி, மாற்பிடுகு பெருங் கிணறு’ என்றும் அழைப்பர்.
ஶ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், ஆதிசேஷன், குபேரன் ஆகியோர் இன்றும் அன்றாடம் இங்குள்ள சுவாமியை வழிபடுவதாக ஐதீகம். திருமகள் தங்கி இருந்த பூங்கிணறு, திவ்ய தீா்த்தம், வராஹ தீா்த்தம், குசஹஸ்தி தீா்த்தம், சந்திர புஷ்கரணி தீா்த்தம், பத்ம தீா்த்தம், புஷ்கல தீா்த்தம், மணிகா்ணிகா என 8 தீர்த்தங்கள் இங்கு உள்ளன.

ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த ஆலயத்தில் பல்லவமன்னன் தந்திவா்மன் காலத்து (805-ம் ஆண்டு) கல்வெட்டு தொடங்கி விஜயநகர அரசர்கள் காலத்து கல்வெட்டுகள் வரை இந்த ஆலயத்தின் பெருமைகளைக் கூறுகின்றன. வரலாற்றுப் பெருமைகளும் புராண மகிமைகளை கொண்ட இந்த திருவெள்ளரைத் திருத்தலம் திருமகளின் பரிபூரண கடாட்சத்தைக் கொண்டுள்ளது.
வாய்ப்புக் கிடைப்பவர்கள் திருவெள்ளரைத் திருத்தலத்துக்கு சென்று வாருங்கள். செய்த வினைகள் யாவும் அழிந்து எளிதில் பெருமானின் கருணைக்கு ஆளாகலாம் என்பது ஆன்றோர் வாக்கு.