திருவண்ணாமலை ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றம்! ‘அரோகரா’ முழக்கமிட்டு பக்தர்கள் வழிபாடு! – Kumudam

Spread the love

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம்.இங்கு பரந்து விரிந்து அமைந்துள்ள மலையில் சிவபெருமானே அக்னித் திரியாக எரிந்து அருள்பாலிப்பதாகப் பக்தர்கள் நம்புகின்றனர். இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.காலை, மாலை வேளைகளில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கார்த்திகை தீபத்திருவிழாவின் ஒன்பதாவது நாளான நேற்று விநாயகர் மூஷிக வாகனத்தில் வலம் வந்தார். அம்பாளுடன் சந்திரசேகரர் புருஷாமிருக வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க வலம் வந்தனர்.அப்போது மாட வீதிகளில் குழுமியிருந்த மக்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் சிவபெருமான் ஒருவனே என்பதை விளக்கும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. கோயிலின் பின்புறம் உள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்படுவதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் ஏற்றப்படும் கொப்பரை மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மகா தீபத்தைத் தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.அருணாசலேஸ்வரர் கோயில் மட்டுமன்றி, கிரிவலப் பாதை முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.15,500 போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 31 இடங்களில் காவல்துறை சார்பில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிரிவலப் பாதை முழுவதும் 500 மீட்டருக்கு 50 போலீசார் வீதம் நிறுத்தப்பட்டுள்ளனர்.பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *