
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம், லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக பணியாற்றி வந்தார். சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 18-ஆம் தேதி தென்பாகம் போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, மூன்று போலீசார் தன்னை தாக்கியதாக அருணாச்சலம் நண்பர்களிடம் கூறியதாக தகவல் வெளியானது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மருத்துவமனையில் ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் இன்று உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், போலீசார் தாக்கியதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி, சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை உடலை வாங்க மறுத்தனர்.
இதற்கிடையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்து தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளதாவது ,தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது. போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து எம்பி கனிமொழியும் தனது எக்ஸ் தள பதிவில் கடும் கண்டனத்தை தெரிவத்துள்ளார். இதில் நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்! நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம். அருணாச்சலம் மரணம் குறித்து தங்களின் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.