தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், ‘தேனிசைத் தென்றல்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான தேவா சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், கானா பாடல்களைத் தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தியதில் முக்கியப் பங்கையாற்றியவர். இதனால், ரசிகர்கள் அவரை ‘கானா தேவா”, “கானா இசை மன்னன்’ என்றும் அழைத்து வந்தனர்.
‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட பல படங்களின் பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் நீங்காத இடம்பிடித்தவர் தேவா. அவரது இசையில் உருவான பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
தேவாவின் மறைவுச் செய்தி தமிழ் திரையுலகிலும், இசை ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் தேவாவின் மறைவுச்செய்தி கேட்டதும் மிகுந்த வேதனை அடைந்தேன் என்று தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் தேவாவின் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் மதியம் 3 மணி அளவில் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார்.

