தேர்தல் ஆணையம் விவகாரம்: “அமிஷ் ஷாவின் நிழலே ஞானேஷ்குமார்" – காரணங்களை அடுக்கிய மாணிக்கம் தாகூர்

Spread the love

தேர்தல் ஆணையம் மீது தற்போது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது, “2016 மே மாதத்தில் உள்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளராகப் பொறுப்பேற்ற ஞானேஷ் குமார், அப்போது உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் இருந்தபோதிலும், அமித் ஷாவுக்கு அறிக்கை அளிக்கும் மனநிலையில் வலம்வந்தவர்.

அமித் ஷா – ஞானேஷ் குமார்

2019-ல் அமித் ஷா உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, 370-ஐ ரத்து, ‘ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா’ உள்ளிட்ட அமித் ஷாவின் பல்வேறு தவறான நடவடிக்கைகளுக்கும், முறைகேடுகளுக்கும், உறுதுணையாகச் செயல்பட்டவர். 2019-ல் அயோத்தி அறக்கட்டளையை நிர்வாகிக்கும் பொறுப்பு, 2021-ல் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை செயலாளர், 2022-ல் மத்திய கூட்டுறவுத் துறையின் செயலாளர் என அமித் ஷாவின் நிழலியே இருந்தார். 2024 ஜனவரியில் பணிநிறைவு பெற்ற அவர், தற்போதைய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு பா.ஜ.க மற்றும் அமித் ஷாவின் ஏஜென்ட்டாகச் செயல்படுகிறார். இதுவே நாட்டின் மக்களாட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய மிக முக்கியமான தீர்ப்பில், `பிரதமரின் தலைமையிலான குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற வேண்டும். இக்குழுவே தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்த நடைமுறையை ஏற்றுக்கொள்ளாத மோடி அரசு, 2023 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாடாளுமன்றத்தில் புதிய சட்ட மசோதாவைக் கொண்டு வந்தது. இச்சட்டத்தின் மூலம், தேர்வுக்குழுவில் இருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மத்திய உள்துறை அமைச்சர் சேர்க்கப்பட்டார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, ஜனநாயக வரலாற்றில் இல்லாத வகையில் 146 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கி, அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், அரசுக்குச் சாதகமான நபரையே தேர்தல் ஆணையராக நியமிக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதாகும். ஆனால், இந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

இத்தகைய சட்டப் பின்னணியைப் பயன்படுத்தியே, ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். மேலும், அப்போது அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரியின் எதிர்ப்பையும் புறந்தள்ளிவிட்டு, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் முடிவின்படி இந்நியமனம் நடைபெற்றது. தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றது முதல், ஞானேஷ்குமார் SIR உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மோடி - தேர்தல் ஆணையம்
மோடி – தேர்தல் ஆணையம்

ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இது ஜனநாயக படுகொலை என்றும், 2024 பொதுத் தேர்தல் தொடங்கி ஹரியானா, மகாராஷ்டிரா, பீகார் என அடுத்தடுத்த தேர்தல்களில் பா.ஜ.க-வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையம் மூலம் முறைகேடுகள் செய்யப்படுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில்தான் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வெளியான புலனாய்வு அறிக்கை, இத்தகைய குற்றச்சாட்டுகளையும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளையும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

எனவே, ஞானேஷ்குமார் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில அளவிலான போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘வாக்குத் திருட்டு’ மற்றும் ‘வாக்காளர் மேனிபுலேஷன்’ என அனைத்துத் தேர்தல்களிலும் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்து தனி ஆளாகப் போராடி வருகிறார். தேர்தல் ஆணையத்திற்குள் மற்ற ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி, முறைகேடுகளுக்கு ஒத்துழைக்காத ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரி சஞ்சய் குமார் போன்ற நேர்மையான அதிகாரிகள் மாற்றப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

ஆர்.எஸ்.எஸ், மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் இத்தகைய நடவடிக்கைகளால் ஒவ்வொரு இளைஞரின் வாக்களிக்கும் உரிமையும் அதன் மதிப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர, பிற எதிர்கட்சிகள் மற்றும் தலைவர்கள் மோடி மற்றும் அமித் ஷாவின் பெயர்களைக் கூட நேரடியாகக் குறிப்பிடாமல் மென்மையான போக்கை மேற்கொள்வது விமர்சனத்திற்குரியது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் மதவாதப் போக்குக்கு எதிராகத் தொடர்ந்து உறுதியுடன் நின்று போராடும்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *