மீனவர் சமூகமும் திரைக்கதைகளும் தற்செயலா, திட்டமிட்டதா?
நிலாவே வா, சுறா, மெர்சல், சர்க்கார் போன்ற படங்களில் கடலோர வாழ்வியல் மற்றும் மீனவர் சமூகத்துடன் தொடர்புடைய கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருப்பது. தமிழக அரசியலில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மீனவர் வாக்குகள் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கின்றன. இலங்கை கடற்படை நடவடிக்கைகள், வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்று மீனவர் உரிமைகள் பொது விவாதத்தில் இருந்த காலகட்டத்தில் அந்த சமூகத்துடன் உணர்வுபூர்வ தொடர்பை ஏற்படுத்தும் திரைமுகம் உருவானது தற்செயலா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் திரைப்படக் கதாபாத்திரங்களுக்கும் அரசியல் ஆதரவுக்கும் இடையே நேரடி காரண-விளைவு தொடர்பை நிரூபிப்பது கடினம் என்பதும் நாணயமான மதிப்பீடாகும்.
வருமான வரித்துறை விசாரணைகள்
2015 இல் புலி திரைப்படத்தின் நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டது; சில வருமானங்கள் முழுமையாக கணக்கில் காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் அபராத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. 2020 இல் பிகில் படத்தின் நிதி விவகாரங்கள் தொடர்பாக ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய் விசாரணைக்கு அழைக்கப்பட்டது அரசியல் மற்றும் ஊடக விவாதங்களை கொழுந்துவிட்டு எரியவைத்தது. ஆதரவாளர்கள் இதை அரசியல் நோக்கமுடைய நடவடிக்கை என கண்டித்தனர்; வரித்துறை தரப்பில் இது வழக்கமான வரி ஆய்வு என்று விளக்கப்பட்டது.

“இளைய தளபதி” யிலிருந்து “தளபதி” வரை
திரையுலகில் விஜய் “இளைய தளபதி” என்று அழைக்கப்பட்டதிலிருந்து “தளபதி” என்று மாறியது வெறும் பட்டப் பெயர் மாற்றமாக மட்டுமல்ல. ஒரு முதிர்ந்த தலைமை பிம்பத்தை நோக்கிய குறியீட்டு நகர்வாக பார்க்கப்படுகிறது. திரைப்படங்களில் இடம்பெற்ற அரசியல் வசனங்கள், மக்களுக்காக போராடும் கதை அமைப்புகள், ரசிகர் மன்றங்களின் விரிவாக்கம், சமூக நலச் செயல்பாடுகள், திரை வெளியீடுகளின் போது வெளிப்பட்ட மாபெரும் மக்கள் அலை. இவை அனைத்தும் சேர்ந்து, அவரை சாதாரண நடிகர் என்ற எல்லையிலிருந்து மக்கள் மனதில் செல்வாக்கு கொண்ட தலைவராக உயர்த்தின.
விஜய் பட பாடல்களின் அரசியல் தாக்கம்: தலைவன் பிம்பம்
விஜயின் பல திரைப்படப் பாடல்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டுமே இல்லாமல், அவரது திரைமுகத்தையும் சமூக-அரசியல் பிம்பத்தையும் வடிவமைத்த முக்கிய கருவிகளாக செயல்பட்டன. மக்கள் எழுச்சி, ஊழல் எதிர்ப்பு, தமிழ் அடையாளப் பெருமை, இளைஞர் சக்தி, தலைமைத்துவம், சமூக நீதி மற்றும் அரசியல் மாற்றம் போன்ற கருத்துகளை இப்பாடல்கள் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தின.
குறிப்பாக வேட்டைக்காரன் திரைப்படத்தின் “புலி உறுமுது”, சுறாவின் “வெற்றிக்கொடி ஏத்து”, தலைவாவின் “தளபதி தளபதி”, மெர்சல் திரைப்படத்தின் “ஆளப்போறான் தமிழன்”, சர்கார் படத்தின் “ஒரு விரல் புரட்சி”, லியோவின் “நா ரெடி”, வாரிசுவின் “தீ தளபதி”, மற்றும் GOAT திரைப்படத்தின் “வீசில் போடு” போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே வெறும் கொண்டாட்டப் பாடல்களாக மட்டுமல்லாமல், ஒரு தலைவர் குறித்த கற்பனை, அரசியல் விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, சமூகப் பங்கேற்பு மற்றும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கும் கலாச்சாரச் சின்னங்களாகவும் மாறின.
இப்பாடல்கள் மூலம் விஜய் ஒரு சாதாரண திரைப்பட நட்சத்திரமாக மட்டுமல்லாமல், மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தலைமைத்துவ முகமாகவும், அரசியல் மாற்றத்தின் சாத்தியமான அடையாளமாகவும் ரசிகர்களின் மனதில் படிப்படியாக நிலைநிறுத்தப்பட்டார்.