தொகுதி சீரமைப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே பாராளுமன்றத்தில் ஒரு முறை இம்மசோதா கொண்டு வரப்பட்டு தோல்வி அடைந்துவிட்டது.
இப்போது மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் ஆதரவைத் திரட்டுவதற்காக பா.ஜ.க ஒவ்வொரு கட்சியிலும் எம்.பி.க்களை மறைமுகமாக தன் பக்கம் இழுத்து வருகிறது.
ஏற்கனவே உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சியான மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்குத் தாவிவிட்டனர்.
இதே போன்று மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் கணிசமான எம்.பி.க்களைத் தங்களது கூட்டணிக்கு பா.ஜ.க கொண்டு வந்துவிட்டது. அடுத்ததாக மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சி பக்கம் பா.ஜ.க-வின் பார்வை திரும்பி இருக்கிறது.

சரத்பவார் கட்சிக்கு மக்களவையில் 8 எம்.பி.க்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
ஆனால் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்குத் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) ஆதரவளிப்பதாகக் கூறப்படும் வதந்திகளையும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைய இருப்பதாக் கூறப்படும் கருத்துகளையும் அக்கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த விவகாரத்தை “ஒரு தேநீர்க் கோப்பையில் எழுந்த புயல்’ என்றும், இது குறித்து எந்த மீடியாவிற்கும் நாங்கள் செய்தி கொடுக்கவில்லை என்றும், மசோதா இன்னும் விவாதத்திற்கு வரவில்லை என்றும், வரும்போது 24 மணி நேரத்திற்கு முன்பு அது பற்றி முடிவு எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.