Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலிடத்தை பிடித்துள்ளார். அதேபோல் சீனியர் வீரர்களான விராட் கோலி 3வது இடத்தையும், ரோகித் சர்மா 4வது இடத்தையும் பிடித்துள்ளனர். டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறி 48வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 910 புள்ளிகளுடன் இந்திய நட்சத்திர வீரர் இஷான் கிஷன் முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா ஒரு இடம் பின் தங்கி 3வது இடத்தில் உள்ளார்.

இந்திய துணைக் கேப்டன் திலக் வர்மா 2 இடங்கள் முன்னேறி 6வது இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 இடங்கள் முன்னேறி 24வது இடத்திலும் இருக்கின்றனர். அதேபோல் சஞ்சு சாம்சன் 3 இடங்கள் பின் தங்கி 30வது இடத்தில் உள்ளார். 15 வயதாகும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறி 48வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் 3 இன்னிங்ஸில் 151 ரன்களை விளாசியதால், இந்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்திருக்கிறார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலிடத்தில் இருக்கிறார். நட்சத்திர வீரர்களான விரட் கோலி 3வது இடத்திலும், ரோகித் சர்மா 4வது இடத்திலும் உள்ளனர்.
அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் 13வது இடத்திலும், கேஎல் ராகுல் 18வது இடத்திலும் உள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதிலும் வைபவ் சூர்யவன்ஷி 2 டி20 தொடர்களிலேயே 50 இடங்களுக்குள் வந்திருப்பது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்திய மண்ணில் நடக்கும் டி20 கிரிக்கெட் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடும் பட்சத்தில் அவர் நம்பர் 1 வீரராக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர். வைபவ் சூர்யவன்ஷியின் அபரிவிதமான எழுச்சி இந்திய கிரிக்கெட்டுக்கும் புத்துயிர் கொடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
