நவராத்திரியில் கொலு பார்க்கப் போறீங்களா? 3 மடங்கு புண்ணியம் கிடைக்குமாம்… இதைத் தெரிஞ்சுக்கோங்க! – Kumudam

Spread the love

பலன் தரும் பரிகாரம்! – வி.ராம்ஜி

புரட்டாசி என்றாலே நினைவுக்கு வருவது நவராத்திரிதான். ‘ராத்ரம்’ என்ற வடமொழிச் சொல் நாளைக் குறிக்கிறது. பகலில் செய்யப்படும் பூஜையானது இறைவனுக்கு உரியது. இரவில் செய்யப்படும் பூஜை என்பது இறைவிக்கு உரியது. அதாவது, தேவிக்கு உரியது; அம்பாளுக்கு உகந்தது. ஆனால், நவராத்திரி காலத்தில் இரண்டு வேளைகளில் செய்யப்படும் பூஜைகளும் அம்பிகைக்கே உரியது என்பதுதான் நவராத்திரி வழிபாட்டின் மகத்துவம்! கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்போம். அதேபோல், கொலு வைபவத்தைக் கண்ணாரத் தரிசிப்பதும் பிரார்த்தனை செய்வதும் கோடி புண்ணியங்களைத் தரும் என்பதுதான் சக்தியின் சக்தியைச் சொல்கிற நவராத்திரி வைபவத்தின் சிறப்பு!

சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரி விரதம் கொண்டாடப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதத்தில் பாத்ரபத நவராத்திரி விரதம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பருவ காலங்களில், தோன்றிப் பரவும் கடுமையான வியாதிகளைக் குணப்படுத்தவே இதுபோன்ற பண்டிகைகள், வழிபாடுகள், விரதங்கள், பூஜைகள்! இவற்றில் மிக முக்கியமானது நவராத்திரி விழா.

நவராத்திரியின் முதல் 3 நாட்கள் சக்தியை, துர்கை அம்சமாக வழிபடச் சொல்கிறது சாஸ்திரம். அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியின் அம்சம். கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியின் அம்சமாகக் கொண்டாட வேண்டும். இந்த ஒன்பது நாட்களும் இப்படியாக அம்பாளை ஆவாஹனம் செய்து ஆராதித்து, பூஜைகள் மேற்கொண்டு உரிய மந்திரங்களை ஜபித்து வந்தால், மாங்கல்ய பலம் கிடைக்கப்பெறலாம்; தாலி பாக்கியம் கிடைக்கப்பெறலாம். கணவரின் ஆயுள் அதிகரிக்கும்; இல்லத்தில் உள்ளவர்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது ஐதீகம்!

இந்த ஒன்பது நாட்களும் சக்தியை சூட்சுமமாக பாவித்து வழிபடுவதால் ‘நவராத்திரி’ என்ற சிறப்புப் பெயர் பெற்றது. நவராத்திரியின் பத்தாம் நாள் பூஜை மிகவும் முக்கியமானது. மூல நட்சத்திரம் உச்சமாக உள்ள 6 அல்லது 7-ஆம் நாளில் ஆவாஹனம் செய்யப்படும் சரஸ்வதிதேவிக்கு பத்தாம் நாளில் சிரவணம்- திருவோணம் நட்சத்திரம் உச்சமாகும்போது பூஜை நடத்தப்படுகிறது. இது சரஸ்வதி தேவியின் அருள் கிடைப்பதற்காகச் செய்யப்படும் ஆராதனை. இதனால் அம்பாளின் பூரணமான அருளைப் பெறலாம் என்கிறார் வேதிக் விஜய் சர்மா.

நம் வீட்டில் உள்ள குழந்தைகளின் புத்தகங்களுக்குப் புத்துயிர் கொடுப்பதற்காகவே, நம் முன்னோர்களால் சரஸ்வதிதேவி ஆராதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. புரட்டாசி மகாளயபட்ச அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவராத்திரி ஆரம்பமாகிறது. அன்று கொலு வைபவம் வைப்பதும் தொடங்குகிறது. இதில் சக்தி ரூபத்தை முன்னிறுத்தி 9, 11, 21 படிகள் என்ற நிலையில் ‘கொலுக் காட்சி’ வைத்து, பூஜிப்பதும் நைவேத்தியங்கள் செய்து வழங்குவதும் வழக்கம்.

கொலுவில் கண்களைக் கவரும் பொம்மைகளுடன் கடவுளர்கள், விலங்குகள், பறவைகள், வீரர்கள், மகான்கள் முதலானோரின் உருவ பொம்மைகள் வைக்கப்படுகின்றன. கொலுவிழாவின் ஒவ்வொரு நாளிலும் காலை, மாலை இரு வேளைகளிலும் சக்தி பூஜையை செம்மையுற, ஆத்மார்த்தமாக நடத்தவேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம்!

கொலு தொடங்கிய நாள் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் சக்திக்கு விதவிதமாக நைவேத்தியம் செய்து, கொலுவைப் பார்க்க வருபவர்களுக்கு அவற்றைப் பிரசாதமாக அளிக்க வேண்டும். அப்போது பெண்கள் பாட்டுப் பாடியும், குழந்தைகள் தெய்வ வேடங்களை அணிந்தும் வழிபடுவார்கள். வீடுகளில் மட்டுமின்றி, ஆலயங்களிலும் நவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்படும். மைசூர் தசரா விழா என்பது உலகப் பிரசித்தம்.

அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கோயிலில் தசரா விழா விமரிசையாக நடந்தேறும். லட்சக்கணக்கான பக்தர்கள் அப்போது கூடுவார்கள். ஏராளமான பக்தர்கள், ஒவ்வொரு வேடங்கள் அணிந்து வந்து தரிசிப்பதாக வேண்டிக்கொள்வார்கள். அதன்படி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வருகிற பக்தர்கள் ஏராளம்.  பிரமாண்டமானத் திருவிழாவாக குலசை தசரா விழா அமைந்திருக்கும்.

நவராத்திரி விழாவில், தினமும் அம்பாளை ஆராதிப்போம். செந்நிற மலர்கள் சூட்டியும் வெண்ணிற மலர்கள் சார்த்தியும் அம்பிகைக்கு உரிய ஸ்லோகங்கள் சொல்லி, திருநாமங்களைச் சொல்லி பாராயணம் செய்தும் பாட்டுகள் பாடியும் கொண்டாடுவோம். கொலு வைத்திருப்பவர்களின் வீடுகளுக்குச் சென்று, தாம்பூலப் பிரசாதம் பெற்றுக் கொள்வோம்.

கொலு வைத்தால் புண்ணியம். கொலு பார்க்க நம் வீட்டுக்கு பலரும் வந்தால் இன்னும் புண்ணியம். அப்படி கொலு பார்க்க வருகிறவர்களுக்கு மூன்று மடங்கு புண்ணியப் பலன்கள் கிடைக்கும் என்பதுதான் நவராத்திரி பண்டிகையின் அதிசயம்; அற்புதம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *