பிரான்ஸ் நாட்டு அரசு நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மூன்று வயதுக் குழந்தைகள் உட்படப் பல சிறுவர்கள், பாலியல் வன்கொடுமைகளுக்கும், உடல் ரீதியான வன்முறைகளுக்கும் ஆளாக்கப்பட்டிருப்பது பிரான்ஸ் நாட்டையே உலுக்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் அரசு பிரீஸ்கூல் உள்ளிட்ட பள்ளிகளில் நியமிக்கப்பட்டிருந்த தற்காலிகக் கண்காணிப்பாளர்களால் கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருக்கும் செய்தி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக மதிய உணவு இடைவேளை, குழந்தைகள் தூங்கும் நேரம், பள்ளி முடிந்த பிறகான செயல்பாடுகளின்போது இந்த அத்துமீறல்கள் நடந்துள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாரிஸ் நகரத்தின் தலைமை அரசு வழக்கறிஞரான லாரே பெக்குவா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தற்போது 84 ப்ரீஸ்கூல், 20 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 10 குழந்தைகள் காப்பகங்கள் எனப் பல இடங்களில் இந்தக் கொடூரங்கள் நடந்திருப்பதாகத் தெரிகிறது. அது குறித்துத் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், முதற்கட்டமாக ஐந்து பேருக்கு நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.” என்றார்.