`நான் எனது இறுதிச்சடங்கு காரியங்களை எனது கண்ணால் பார்த்துவிட்டதால்.!' – முதியவரின் விநோத செயல்

Spread the love

சிலர் தங்களது மரணத்திற்கு முன்பே தங்களது கல்லறை எந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்துவிடுவார்கள். ஒரு சிலர் தங்களது கல்லறையை தாங்கள் உயிரோடு இருக்கும்போதே கட்டி வைத்துவிடுவர். ஆனால் மத்திய பிரதேசத்தில் ஒரு முதியவர் இறந்த பிறகு செய்ய வேண்டிய சடங்குகளை தான் உயிரோடு இருக்கும்போதே செய்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி அருகில் உள்ள கரேரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹரே கல்யான் பால். 60 வயதாகும் கல்யான் பாலுக்கு திருமணமாகவில்லை. தனியாகத்தான் வசித்து வந்தார்.

நெருங்கிய குடும்ப உறவினர்களும் இல்லை. இதனால் தான் இறந்த பிறகு தனக்கு முறைப்படி கிராமத்தினர் இறுதிச்சடங்குகள் செய்வார்களா என்ற சந்தேகத்தில் கல்யான் பால் இருந்தார். இது அவருக்கு மனதில் ஒரு பெரிய கவலையாகவே இருந்தது. எனவே தான் உயிரோடு இருக்கும்போதே தனது இறுதிச்சடங்கு காரியங்களை செய்துவிட வேண்டும் என்று கல்யான் பால் முடிவு செய்தார்.

இதற்காக அவர் பிரயக்ராஜ் நகருக்கு சென்றார். அங்கு கங்கையில் புரோகிதரை அழைத்து இறந்தவர்களுக்கு செய்யும் சடங்குகளை தனது பெயரில் செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதன் பிறகு அஸ்தியை கரைத்துவிட்டு கங்கையில் நீராடுவது போன்று கல்யான் பாலும் கங்கையில் நீராடினார். அதன் பிறகுதான் அவருக்கு மனதில் ஒரு நிம்மதி வந்தது. இனி இறந்த பிறகு என்ன நடந்தாலும் கவலை இல்லை என்று நினைத்தார். பிரயக்ராஜ் நகரில் இறுதிச்சடங்குகளை முடித்துவிட்டு சொந்த கிராமத்திற்கு வந்த கல்யான் பால் 24 மணி நேர ஆன்மீக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதனை தொடர்ந்து கிராமத்து மக்கள் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார். அனைவரும் இருக்கையில் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார். அதோடு தனது இறுதிச்சடங்கிற்கான அழைப்பிதழையும் கல்யான் பால் அச்சடித்து இருந்து இருந்தார். அந்த அழைப்பிதழ் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது. அதில் இறுதி கங்கை வழிபாடு மற்றும் அன்னதானம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து கிராமத்தினர் கூறுகையில், கல்யான் பால் வீட்டில் அவர் மட்டுமே மகன் ஆவார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் தனது மரணத்திற்கு பிறகு முறைப்படி சடங்குகளை செய்வார்களா என்ற கவலை கல்யான் பாலிடம் இருந்து கொண்டே இருந்தது என்றனர். சடங்குகளுக்கு பிறகு கல்யான் பால் அளித்த பேட்டியில், ”இப்போதுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன். நான் உயிரோடு இருக்கும்போதே எனது அனைத்து இறுதிச்சடங்கு காரியங்களையும் முடித்துவிட்டேன். நான் எனது இறுதிச்சடங்கு காரியங்களை எனது கண்ணால் பார்த்துவிட்டதால் இனி எப்போது எனக்கு மரணம் வந்தாலும் மன அமைதியுடன் ஏற்றுக்கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *