சென்னையில் 1,000 “ஏசி’ மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை ரத்து செய்த தமிழக அரசு, மறு நாளே ரத்து அறிவிப்பை திரும்ப பெற்றது.
“தவறுதலாக டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவற்றை வாபஸ் பெறுகிறோம். டெண்டருக்கான காலக்கெடுவை நவம்பர் 4 வரை நீட்டிக்க வேண்டும்” என, தேசிய தகவல் மையத்திற்கு (NIC), சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (MTC) கடிதமும் எழுதியிருக்கிறது.
இந்நிலையில் தவெக அரசை விமர்சித்து பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ” சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு (MTC) 1,000 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காகக் கோரப்பட்ட டெண்டர் கடந்த புதன்கிழமை ரத்து செய்யப்பட்டு, அடுத்த நாளே அந்த ரத்து உத்தரவு திரும்பப்பெறப்பட்டு டெண்டர் செயல்முறை தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த முரண்பாடான முடிவுகள், நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் இருப்பதையே காட்டுகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு 1,000 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆட்சி மாற்றமும் ஏற்பட்டதால், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த பின்னணியில், நிர்வாகக் காரணங்களால் டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு கடந்த புதன்கிழமை (14ஆம் தேதி) அறிவித்தது. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த ரத்து அறிவிப்பு தவறுதலாக வெளியிடப்பட்டது என்றும், அது திரும்பப்பெறப்பட்டு டெண்டர் செயல்முறை தொடரும் என்றும் மாநகரப் போக்குவரத்து கழகம் பின்னர் தெரிவித்தது.