இன்றைக்குப் பல்வேறு மலைத் தலங்களுக்கும் பயணிக்க பஸ், கார், ரோப் கார் வசதிகள் வந்துவிட்டன. ஆனால் இயற்கைக் காற்று மேனியில் படர சுவாமியைத் துதித்தபடியே மலையேறி வழிபடுவது ஓர் அலாதியான அனுபவம்.
அப்படி ஒரு மலைத்தலம்தான் சொக்கம்பட்டி மலை. இங்குதான் சுயம்பூற்றுநாதர் அருள்கிறார். நெல்லை மாவட்டம் புளியங்குடி-தென்காசி சாலையில் உள்ளது இந்த ஊர்.
திருநெல்வேலியிலிருந்து தென்காசி மற்றும் புளியங்குடிக்குப் பேருந்து வசதிகள் உண்டு. அதில் பயணித்து சொக்கம்பட்டியை அடையலாம். அங்கிருந்து மலையடிவாரத்துக்குச் செல்ல வாகனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 6 கி.மீ பயணித்தால் சுயம்பூற்று விநாயகர் ஆலயத்தை அடையலாம்.
ஒருமுறை இப்பகுதியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இந்தப் பகுதியில் வசித்த மேய்ப்பர் ஒருவர், தான் வளர்க்கும் ஆடு-மாடுகளின் உணவுக்கும் தண்ணீர் தேவைக்கும் வழியின்றி வருந்தினார்.
பஞ்சம் பெரிதாகி அனைவரும் தவிக்கையில் இறைவனைப் பிரார்தித்து, ‘`ஐயா.. காத்தருள வேண்டும். மண்ணையும் மக்களையும் காக்க பெருமழைப் பொழியவேண்டும்’’ என மண்டியிட்டு அமர்ந்து, ஈசனை நோக்கி வேண்டினார்.

அடுத்த கணம் சூறைக்காற்றுடன் பெருமழை பொழிந்தது. அது மட்டுமா? அருகில் குறிப்பிட்ட ஓரிடத்தில் ஊற்றுக்கண் திறந்து தண்ணீர் பெருகியது. மேய்ப்பன் தண்ணீரை கைகளில் அள்ளி கண்களில் ஒற்றிக்கொண்டார்; ஆசைதீரப் பருகினார்; குதூகலத்தில் துள்ளிக் குதித்தார்.
இறைவனுக்கு நன்றி செலுத்த நினைத்தவர், சிவனாரைப் பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபட்டார். மேலும், தானே தோன்றிய ஊற்றுக்கு `சுயம்பு ஊற்று’ என்றும், தான் வழிபட்ட சிவனாருக்கு, “சுயம்பூற்றுநாதர்’ என்றும் திருப்பெயர் சூட்டினார்.
மேலும் ”இந்த ஊற்றில், எப்போதும் தண்ணீர் சுரக்கவேண்டும்’’ என்றும் பிரார்த்தித்தார். அன்று முதல் இன்றுவரை அந்த ஊற்று வற்றாத ஒன்றாகத் திகழ்கிறது.