நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் எக்ஸ் பதிவு:
“தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நியூஸ் தமிழ் 24X7, பாலிமர் செய்திகள் மற்றும் தமிழ் ஜனம் ஆகியவை நீக்கப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும்.
அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சமிட்டு காட்டும் ஊடகங்களை முடக்குவதும், மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் அது முன்வைக்கப்படும் தளங்களையே இருட்டடிப்பதும் தான் தவெக அரசு அளிக்க விரும்பும் மாற்றமா?”
அமமுக நிறுவனர் டி.டி.வி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில்:
“பாலிமர், நியூஸ் தமிழ் 24*7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் ஏற்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆகியவற்றால் மக்கள் படும் துயரங்களைச் செய்திகளாக வெளியிட்டதற்காகவே குறிப்பிட்ட மூன்று செய்தி தொலைக்காட்சிகளும் அரசு கேபிளில் முடக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.
அரசு நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், மக்களின் அன்றாட பிரச்னைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றும் செய்தித் தொலைக்காட்சிகளை முடக்க நினைப்பதும், அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களின் குரலை ஒடுக்க நினைப்பதும் தவெக அரசின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.