மதுரை அழகர் கோவிலில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் கண்டாங்கி பட்டு உடுத்தி நேரிக்கம்புடன் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு ஏப்ரல் 29-ம் தேதி புறப்பட்டர். ஏப்ரல் 30-ல் மாநகர் எல்லையான மூன்றுமாவடியில் அதிகாலை 5.30 மணியளவில் எதிர்சேவை நடந்தது, அழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்றனர்.
பின்னர் புதூர் மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில் வழியாக அவுட் போஸ்ட், தல்லாகுளம் அம்பலகாரர் மண்டகப்படி உட்பட நூற்றுக்கணக்கான மண்டகப் படிகளில் வலம் வந்தார் அழகர். இரவு 9 மணிக்கு மேல் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தங்கினார்.

தொடர்ந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் எழுந்தருளி, பின்னர் தங்கக்குதிரை வாகனத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணியளவில் எழுந்தருளினார். பல்வேறு மண்டகப்படிகளில் சென்று விட்டு வைகை ஆறு நோக்கி புறப்பட்டார்.
இதற்கிடையில், வைகை ஆற்றில் கள்ளழகரை வரவேற்கும் வகையில் எழுத்தாணிக்காரத்தெரு வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரையில் 4.35 மணிக்கு வைகை ஆற்றிலுள்ள சந்திப்பு மண்டபத்துக்கு வந்தார். பின்னர் முக்கிய நிகழ்வாக சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள ஆழ்வார்புரம் வைகை கரைக்கு தங்கக்குதிரை வாகனத்தில் அதிகாலை 5.45 மணிக்கு வந்தார்.

அங்கு கள்ளழகர் கோயில் சார்பில் பூமாலைகள், வெட்டிவேர் மாலைகள் சாற்றப்பட்டன.
கள்ளழகரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக காத்திருந்தனர். வீரராகவப்பெருமாள் வரவேற்க, பக்தர்கள் மனங்குளிர கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் 5.59 மணிக்கு இறங்கினார்.
அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா, அழகர்மலையானே’ என உணர்ச்சிப்பெருக்கில் கோஷங்களை எழுப்பினர்.
பக்தர்கள் பலர் சர்க்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் மண்டகப்படியை மூன்று முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.