படிவம் 6 : `உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை’ – தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி | Gyanesh Kumar case in supreme court full detail

Spread the love

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான “படிவம் 6′-ல் (Form 6) இந்தியத் தேர்தல் ஆணையம் செய்துள்ள மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு அதிரடியாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

படிவம் 6 மாற்றத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாகத் தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்த நிலையில், நீதிமன்றம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. 

வாக்காளர் பட்டியலின் தீவிர மறுசீரமைப்புச் (SIR) செயல்பாட்டின் போது புதிதாக வாக்காளராகப் பதிவு செய்யப் பயன்படும் படிவம் 6-ல் கூடுதல் அறிவிப்பு ஒன்றைச் சேர்க்கத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதில், விண்ணப்பதாரர் தனது பெயர் அல்லது அவரது பெற்றோர், தாத்தா-பாட்டி பெயர் முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்ததா என்ற தகவலைக் குறிப்பிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த கூடுதல் நிபந்தனைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாகத் தேர்தல் ஆணையம் செப்டம்பர் 26 அன்று செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோஹனா ஆகியோர் அடங்கிய அமர்வு, “மாற்றம் செய்யப்பட்ட படிவம் 6-க்கு நாங்கள் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

மேலும், ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் போது, இந்த படிவத்தில் மாற்றங்களைச் செய்தது யார் என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

தேர்தல் ஆணையத்தின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்குத் தேர்தல் ஆணையாளர்களே எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த விளக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.1950-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 32-ன் கீழ் தவறிழைத்த அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், மத்திய அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *