பணக்கஷ்டம், கடன் சுமை வராமல் இருக்க வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டிய ஒரு விஷயம்! | how to be financially free even in crisis times

Spread the love

மாதம் 30,000 சம்பாதிப்பவர்களும் சரி, 3 லட்சம் சம்பாதிப்பவர்களும் சரி, எவ்வளவு சம்பளம் என்பதற்கு அப்பாற்பட்டுதான் பெரும்பாலானோர் மாத கடைசியில் கையில் பணமில்லை என்ற சூழலுக்கு ஆளாகிறார்கள். நாம் ஏன் இந்த நிலைக்கு ஆளாகிறோம் என்பது சிலருக்குத் தெரிந்திருக்கும், பலருக்குத் தெரிந்திருக்காது. அது பற்றித்தான் இங்கு பேசப்போகிறோம்.

அதற்கு முன் ஒரு குட்டிக் கதையைப் பார்க்கலாம்.

1942-ம் ஆண்டு. இரண்டாம் உலகப் போர் சமயத்தில், உலகிலேயே மிக ஆபத்தான போர் டாங்கிகளைக் கொண்டிருந்தது ஜெர்மனி ராணுவம். ஜெர்மனியின் நூற்றுக்கும் மேற்பட்ட டாங்கிகள் ரஷ்யாவின் ஸ்டாலின்கிராட் நகருக்கு வெளியே போருக்குத் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அப்போது ரஷ்யாவில் கடும் பனிக்காலம். பனிப்பொழிவு டாங்கிகளின் இன்ஜின்களைப் பாதித்து இயங்க விடாமல் செய்துவிடும் என்பதால் டாங்கிகளின் இன்ஜின்களைப் பாதுகாப்பதற்காக, அவற்றை மண்ணில் பெரிய பள்ளங்களைத் தோண்டி அதில் நிறுத்தி, மேலே வைக்கோல் போட்டு மூடி வைத்தார்கள்.

சில நாள்களுக்குப் பிறகு போருக்குத் தயாராக உத்தரவு வந்தது. வீரர்கள் வேகமாக டாங்கிகளுக்குள் ஏறி, இன்ஜின்களை இயக்க முயன்றார்கள். ஆனால், டாங்கிகள் நகரவே இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட டாங்கிகளில் சில டாங்கிகள் மட்டுமே இயங்கின.

எலி (சித்திரிப்பு படம்)

எலி (சித்திரிப்பு படம்)
pexels

பனியிலிருந்து இன்ஜின்களைப் பாதுகாப்பாக வைத்தும் ஏன் டாங்கிகள் இயங்கவில்லை என்று அனைவருக்கும் குழப்பம். அப்போதுதான் டாங்கிகளுக்குள் எலிகள் புகுந்திருந்தது தெரியவந்தது. வைக்கோலுக்குள் மறைந்திருந்த எலிகள், இரவோடு இரவாக டாங்கிகளின் இன்ஜின்களுக்குள் புகுந்து, மின் வயர்களைக் கடித்துத் துண்டித்திருந்தன. எதிரிகளைப் பற்றியும், பனிப்பொழிவைப் பற்றியும் யோசித்து முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்தவர்களுக்கு இந்த எலிகள் தந்த பிரச்னை பற்றிய யோசனையே இல்லை.

உலகையே அச்சுறுத்தக்கூடிய போர் இயந்திரங்கள், சிறிய எலிகளால் செயல்படாமல் முடங்கிப்போயின.

எலி கற்றுத்தந்த பாடம்!

நம்மில் பலருடைய நிதி வாழ்க்கையிலும் இதுதான் நடக்கிறது. நாமும் கண்ணுக்குத் தெரிந்த பல ஆபத்துகளை விஷயங்களைப் பற்றி கவனமாக இருக்கிறோம். ஆனால், கண்ணுக்குத் தெரியாத பல சிறு விஷயங்களும் கூட நம்முடைய நிதிநிலையைப் பாதிக்கும் விஷயமாக மாறுவதை கவனிக்க மறந்துவிடுகிறோம். உண்மையில், நாம் எதிர்பார்க்காத ஒரு சிறிய பிரச்னைதான், நம்முடைய ஒட்டுமொத்த நிதி வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுவிடுகிறது.

வேலை இழப்பு

வேலை இழப்பு

எதிர்பாராத வேலை இழப்பு, திடீரென வரும் பெரிய மருத்துவச் செலவு, நன்றாகச் சென்று கொண்டிருந்த தொழிலில் முக்கியமான வாடிக்கையாளர் விலகுவது எனப் பல பிரச்னைகள் எந்த நேரத்திலும் வரலாம். அவை எப்போது வரும் என்று நம்மால் கணிக்க முடியாது. ஆனால், அப்படியான விஷயங்கள் நடக்கும்போது நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடவும் வாய்ப்புள்ளது.

அவற்றை எதிர்கொள்வதற்கான ஒரே வழி, நம்முடைய நிதித் திட்டத்தில் எப்போதுமே ஒரு ரகசிய இடத்தை உருவாக்குவதுதான். அதாவது, நமக்கே தெரியாமல் வரக்கூடிய ஆபத்துகளைச் சமாளிக்க நமக்காக ஒரு ரகசிய காப்பாளனை உருவாக்க வேண்டும். அதுதான் “எமர்ஜென்சி ஃபண்ட்’ அவசர கால நிதி. இந்தப் பணத்தை அன்றாடச் செலவுகளுக்கோ, வழக்கமான முதலீடுகளுக்கோ பயன்படுத்தவே கூடாது. அது இருப்பதையே மறந்துவிட்டதைப் போல வைத்திருக்க வேண்டும்.

ஒருவருக்கு நல்ல வேலை இருக்கலாம். வசதியான வீடு இருக்கலாம். மாதம்தோறும் வருமானத்துக்கு ஏற்ப செலவுகளைப் பக்காவாகத் திட்டமிட்டும் வைத்திருக்கலாம். ஆனால், உலகம் நம்முடைய பட்ஜெட்டுக்கு ஏற்ப இயங்குவதில்லை. எப்போது விலை ஏறும், எப்போது பணத்தின் மதிப்பு குறையும் என்று எதுவுமே நமக்குத் தெரியாது. மேலும், எதிர்பாராத பிரச்னைகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

அந்த நேரத்தில், கையில் பணமில்லாதவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு மாறாக, முன்கூட்டியே திட்டமிட்டு கணிசமான பணத்தை ஒதுக்கி சேமித்து வைத்திருப்பவர்கள், நெருக்கடியான சூழலிலும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

ஏனெனில், செல்வத்தை உருவாக்குவது வேறு; அதைத் தக்கவைத்துக்கொள்வது வேறு. நம்முடைய வருமானத்தை அதிகரிக்க நாம் பல முயற்சிகளை எடுக்க வேண்டும். புதிய திறன்களை வளர்த்துக்கொள்வது, தொழில் தொடங்குவது, முதலீடு செய்வது எனப் பணத்தைப் பெருக்குவதற்கான பல வழிகளில் நாம் ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும்.

ஆனால், நம் கையில் ஏற்கனவே இருக்கும் சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்க ஒரே ஒரு எளிய வழி, சேமிப்பு மட்டும்தான். எனவே, நமக்கு தெரிந்த செலவுகளை மட்டுமல்லாமல், எதிர்பாராத ஆபத்துகளையும் அதனால் வரக்கூடிய செலவுகளையும் எப்போதுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பணம் பண்ணலாம்

பணம் பண்ணலாம்

உதாரணமாக, ஒரு பாலம் கட்டுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அதில் தினமும் 10 பேர் செல்கிறார்கள் என்றால், அந்தப் பாலத்தை 10 பேர் கடப்பதற்கு ஏற்றவாறு கட்டுவதற்குப் பதிலாக, 20 பேர் கடப்பதற்கு ஏற்றவாறு கட்ட வேண்டும். ஏனெனில் எப்போதுமே அந்தப் பாலத்தில் 10 பேர் மட்டும்தான் செல்வார்கள் என்று சொல்ல முடியாது. பணவிஷயத்திலும் அப்படித்தான். எப்போதுமே தேவையான அளவை விட கூடுதலாக சேமிப்பை திட்டமிடுவது அவசியம். இன்று நாம் ஒதுக்கி வைக்கப்படும் பணம், நாளை நம்மைக் காப்பாற்றும்.

அதுமட்டுமல்லாம. அவசர கால நிதி இருந்தால், நம்முடைய மேலதிகாரி தனியாக அழைக்கும்போதெல்லாம் வேலை போய்விடுமோ என்ற பயம் ஏற்படாமல் இருக்கும். திடீரென உங்கள் வாகனம் பழுதடைந்துவிட்டால், பணத்துக்கு என்ன செய்வது என்ற பதற்றம் இருக்காது. மாத வருமானம் தற்காலிகமாக நின்றுபோனாலும், அடுத்த சில மாதங்களுக்கான செலவுகளைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கும்.

அந்தவகையில், அவசரகால நிதி நம்முடைய பணத்தை மட்டுமல்ல; நம்முடைய மன அமைதியையும் பாதுகாக்கிறது.

எனவே, கைக்கு வரும் ஒவ்வொரு ரூபாயையும் செலவழித்துவிடாதீர்கள். வருமானம் கிடைத்ததும், செலவுகளைச் செய்த பிறகு மிச்சமாகும் பணத்தைச் சேமிக்கலாம் என்று காத்திருக்காதீர்கள். முதலில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வையுங்கள். வருமானம் அதிகரிக்கும்போது, அந்தத் தொகையையும் படிப்படியாக அதிகரியுங்கள்.

உங்களுடைய மாதச் செலவுகள், வருமானத்தின் நிலைத்தன்மை, குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, சில மாதங்களுக்கான அத்தியாவசியச் செலவுகளைச் சமாளிக்கக்கூடிய அளவுக்கு அவசரகால நிதியை உருவாக்குவதை இலக்காக வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பணம் எளிதாக எடுத்து பயன்படுத்தும் வகையிலும், பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *