பண வரவை ஈர்க்கும் 11 எளிய பரிகாரங்கள்… இன்று – வரலட்சுமி விரத நாளில் தொடங்குவது விசேஷம்|Varalakshmi virtham-11 simple remedies to attract the inflow of money…

Spread the love

இன்று வரலட்சுமி விரதம்.

ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையாகிய இந்த நாள், மிகவும் மகத்துவம் பொருந்தியது என்கின்றன ஞானநூல்கள். இன்று கலசம் ஸ்தாபித்து மகாலட்சுமியை முறைப்படி விரதம் இருந்து வழிபட்டு, நோன்புச் சரடு கட்டிக்கொள்வதால் சகல நன்மைகளும் உண்டாகும்.

வாழ்வில் செல்வம், ஆரோக்கியம் மற்றும் தீர்க்க சுமங்கலி வரம் முதலிய சகல நலன்களையும் வரலட்சுமி நோன்பைக் கடைப் பிடிப்பதன் மூலம் பெறலாம் என்று விரத நூல்கள் வழிகாட்டுகின்றன. மட்டுமன்றி அன்னை மகாலட்சுமிக்குப் பிடித்தமான வழிபாடுகள் பாராயணங்களை இன்று தொடங்கிச் செய்வது விசேஷம்.

அவ்வகையில் நம் வீட்டில் சுபிட்சத்தையும் பொருளாதாரச் செழிப்பையும் உண்டாக்கவல்ல எளிய வழிபாடுகளை – பரிகாரங் களை இந்த நாளில் தொடங்கி, தொடர்ந்து கடைப்பிடித்து வரலாம். `லட்சுமி தந்திரம்’ முதலான பழைமையான நூல்கள் அற்புதமான வழிபாடுகள் குறித்து விவரிக்கின்றன. அவற்றைக் கடைப்பிடிப்பதால் பொன் – பொருள் ஈர்ப்பும்; தன ஆகர்ஷணமும் உண்டாகும். வீட்டில் பணத்துக்குக் குறைவே இருக்காது.

அவற்றில் எளிமையான 11 வழிபாட்டு வழிமுறைகள் இங்கே உங்களுக்காக!

லட்சுமி விளக்கு வழிபாடு

லட்சுமி விளக்கு வழிபாடு

1. வெள்ளிக் கிழமைகளில் மாலையில் தாமரை வடிவிலான கோலம் இட்டு அதன் மீது குத்து விளக்கு ஏற்றி வைத்து, அந்த விளக்கையே லட்சுமியாக பாவித்து பன்னிரு தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், பெண்களுக்கு விரைவில் கல்யாணம் கைகூடும். திருமணத்துக்குத் தேவையான பொன் – பொருள் சீக்கிரம் சேரும். வரலட்சுமி விரதத்துடன் இணைந்து வரும் வெள்ளிக்கிழமையில் (இன்று) செய்வது மிகவும் விசேஷம்.

2. தாமரை மலர்கள் நிறைந்த குளங்கள் மகாலட்சுமி அம்சமாகும். இந்தத் தாமரைக் குளங்களில் வசிக்கும் மீன்களுக்கு பொரி, அவல் ஆகியவற்றை இட, லட்சுமிகடாட்சம் உண்டாகும்; எதிர்பாராத அதிர்ஷம் தேடி வரும்.

வலம்புரிச் சங்கு

வலம்புரிச் சங்கு

3. வலம்புரிச் சங்குக்கு லட்சுமிவாசம் என்றொரு பெயர் உண்டு. பொன், வெள்ளி அல்லது பித்தளையால் செய்யப்பட்ட ஆமைவடிவ பீடத்தில் வலம்புரிச் சங்கினை வைத்து, அதனுள் லட்சுமி வடிவம் பொறித்த காசுகளை இட்டுவைத்தால் வீட்டில் செல்வகடாட்சம் நிறைந்திருக்கும்.

4. சதக நூல்களில் வில்வ மரம் லட்சுமியின் இருப்பிடமாகச் சொல்லப்பட்டுள்ளது. வெள்ளிக் கிழமைகளில் லட்சுமிதேவியை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுவோர், சகல செளபாக்கியங்களையும் பெறுவர். அவர்களின் இல்லம் தேடி வந்து அருள்வாள் திருமகள். கடன் பிரச்னைகள் முற்றிலும் விலகும்.

5. பன்னீரும் சந்தனமும் லட்சுமிதேவிக்கு உவப்பானவை. பாற்கடலில் திருமகள் உதித்த போது திசை யானைகள் எட்டும் துதிக்கையால் நீர்வாறி இறைத்து மகாலட்சுமியை அபிஷேகித்து வழிபட்டனவாம். இதைக் குறிப்பதே பன்னீர் தெளிப்பது என்பார்கள் பெரியோர்கள். சந்தனம் திருமகளுடன் தோன்றிய ஐந்து விருட்சங்களில் ஒன்று. ஆக, கோயில்களில் அபிஷேகத் துக்கு பன்னீர், சந்தனம் வாங்கிக் கொடுப்பதால், நம்மை வாட்டும் கடன் தொல்லைகள் நீங்கும்; காரியத் தடை விலகும்; மங்கல காரியங்கள் கைகூடும்.

6. இனிப்புப் பொருள்கள் மகாலட்சுமிக்கு உவப்பானவை. லட்டு முதலான இனிப்புப் பட்சணங்களை லட்சுமிதேவிக்குப் படைத்து, ஏழைக் குழந்தைகளுக்கு விநியோகித்தால், வறுமைச் சூழல் நீங்கும்.

கல் உப்பு

கல் உப்பு

7. உப்பு மகாலட்சுமியின் அம்சம். மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியவள். உப்பும் கடலில் உதிப்பது. ஆக, வீட்டில் எப்போதும் உப்பு இருக்கவேண்டும். வெள்ளிக் கிழமை சுக்ரனுக்கு உரிய நாள். அன்று சுக்ர ஓரையில் உப்பு வாங்கி வந்தால், வீட்டில் வருமானம் பெருகும். புது வீட்டுக்குப் போகும்போது முதலில் கொண்டு செல்லும் மங்கலப் பொருள்களில் உப்பும் இடம்பெறவேண்டும்.

8. தேர்கள் லட்சுமியின் வடிவங்கள். ஆகவே, திருக்கோயில்களின் தேரோட்டத்தைத் தரிசிப்பதும், அன்றைய நாளில் விசிறி தானம் வழங்குவதும் விசேஷம். இதனால் வாகன யோகமும், வாழ்வில் செழிப்பும் உண்டாகும்.

9. வீடு, ஆலயம், சபை முதலான இடங்களில் வாயில் திருநிலைப் பகுதியில் கஜலட்சுமி வடிவை அமைப்பது வழக்கம். இந்த அன்னையைத் திருநிலை நாயகி என்பார்கள். வீட்டு விசேஷங்கள், சுப நாள்களின்போது திருநிலை மற்றும் தலைவாயிலை மாவிலைத் தோரணம், பூக்களால் அலங்கரிப்பதால் மகாலட்சுமி மகிழ்வாள்; அதனால் வீட்டில் செல்வகடாட்சம் பெருகும்; வருமானம் உயரும்.

10. கோயில் வழிபாட்டிலும் அற்புதமான விசேஷம் ஒன்றுண்டு. காலையில் லட்சுமி வராகரையும், நண்பகலில் லட்சுமி நாராய ணரையும், மாலையில் லட்சுமி நரசிம்மரையும் வணங்கி வழிபடுவது விசேஷம். இதனால் இல்லத்தில் லட்சுமிகடாட்சம் பெருகும்.

11. வெள்ளிக் கிழமைகளில் 9 தீபங்கள் ஏற்றி வைத்து லட்சுமி தேவியை வழிபடலாம். அதாவது நடுவில் மகாலட்சுமி, சுற்றிலும் திக்குக்கு ஒன்றாக அஷ்ட லட்சுமிகள் எனும்படி 9 தீபங்களை ஏற்றிவைத்து வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் ஸித்திக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *