"பதவி விலகச் சொல்லுங்க…" – முதல்வருக்கு சீனியர் அமைச்சர்கள் அட்வைஸ்!

Spread the love

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் பூதாகரமாகி, த.வெ.க ஆட்சிக்கு பெரிய நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. எம்.எல்.ஏ மீது பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கொடுத்திருக்கும் ஆபாச மெசேஜ் புகாரின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, இன்று நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது தமிழக அரசு. இந்தச் சூழலில், ‘கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷை பதவி விலகச் சொல்ல வேண்டும்’ என முதல்வருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள் சில சீனியர் அமைச்சர்கள்.

அருள் விக்னேஷ்
அருள் விக்னேஷ்

அதுகுறித்து நம்மிடம் பேசிய அமைச்சர்கள் சிலர், “சம்பந்தப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக, அருள் விக்னேஷ் மீது கடந்த ஒரு மாதமாகவே சர்ச்சை வெடித்து சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நவ.23-ம் தேதி மதியம் அந்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியுடன் தான் உரையாடியது குறித்து எழுத்துப்பூர்வமான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் அரசுத் தரப்பு வழக்கறிஞர்.

இந்தச்சூழலில், பெண் அதிகாரியின் புகார், உயர் நீதிமன்றத்தின் கடுமையான கேள்விகள், எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களால் கடும் அப்செட்டில் இருக்கிறார் முதல்வர் விஜய். அருள் விக்னேஷிடம் முறைப்படி விசாரித்து, தவறு நடந்திருக்கும் பட்சத்தில் அவரைக் கைது செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார். இன்று எம்.எல்.ஏ-வின் வீட்டுக்குச் சென்ற போலீஸார், அவரது செல்போனை கைப்பற்றியிருக்கிறார்கள். அதனை ஆய்வுக்கு உட்படுத்தி, பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவுள்ளனர்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இதற்கிடையே, ‘ஒரு மக்கள் பிரதிநிதி மீதான குற்றச்சாட்டு ஒட்டுமொத்த அரசின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கிவிடும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், எம்.எல்.ஏ பதவியிலிருந்து அவரை விலகச் சொல்ல வேண்டும்’ என்று சீனியர் அமைச்சர்கள் சிலர் முதல்வருக்கு அட்வைஸ் அளித்துள்ளனர். அதன்மூலமாக, ‘கட்சியினரிடம் ஒழுக்கமும் கண்டிப்பும் உருவாவதோடு, ‘யார் தவறு செய்தாலும் முதல்வர் மன்னிக்க மாட்டார்’ என்பது உறுதியாகிவிடும்’ என்றும் கூறியுள்ளனர். போலீஸ் விசாரணை முடிவுக்குப் பின்னர், அருள் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம்” என்றனர்.

அருள் விக்னேஷ் மீதான புகார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட போது, ”யாரையும் பாதுகாக்க முயற்சிக்க வேண்டாம். ஆபாச தாக்குதலுக்கு உள்ளாவது தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, அதைவிட கீழ் பதவியில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை” என்று கடும் வார்த்தைகளால் எச்சரித்திருக்கிறது நீதிமன்றம். இதெல்லாம் முதல்வருக்கு நெருக்கடியை உருவாக்கியிருப்பதாகச் சொல்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *