பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! | Pakistan Economic Survey: Poverty Surges to 28% as Education Spending Hits Historic Low of 0.8% GDP

Spread the love

International

oi-Vigneshkumar

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கோடிக்கணக்கான மக்கள் ஒரு காலத்தில் தங்கள் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்த வருமானம், இப்போது அன்றாடச் செலவுகளுக்கே போதவில்லை என்பதை உணர்ந்து வருகின்றனர். விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி சாமானிய மக்களின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘பாகிஸ்தான் பொருளாதார ஆய்வு 2025-26’ அறிக்கை, அந்நாட்டின் தற்போதைய அவல நிலையைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. பாகிஸ்தானின் முன்னணி ஊடகமான ஜியோ நியூஸ் வெளியிட்டுள்ள இந்த டேட்டாவின்படி, அந்நாட்டில் வறுமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதே சமயம், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கல்விக்கான நிதி ஒதுக்கீடு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது.

Pakistan world Pakistan Economic Survey

வறுமையின் பிடியில் பாகிஸ்தான்

கடந்த சில ஆண்டுகளாக வறுமையைக் குறைக்கப் பாகிஸ்தான் எடுத்து வந்த முயற்சிகள் அனைத்தும் இப்போது பின்னோக்கிச் சென்றுள்ளன. பணவீக்கம், வருமான சமமின்மை மற்றும் பொருளாதார அழுத்தங்கள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். 2018-19ஆம் ஆண்டில் 21.9 சதவீதமாக இருந்த தேசிய வறுமை விகிதம், 2024-25 ஆம் ஆண்டில் 28.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், மக்களின் வாங்கும் திறன் பெருமளவு குறைந்துள்ளது. இது குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட கேள்விக்குறியாக்கியுள்ளது.

பிரச்சினை

பொதுவாக வறுமை என்பது கிராமப்புறப் பிரச்சனையாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறை நகர்ப்புறங்களிலும் வறுமை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் அனைத்து முக்கிய மாகாணங்களிலும் வறுமை நிலை மோசமடைந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. கிராமப்புற மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்கத்தினரும் இப்போது பொருளாதாரச் சுமையால் திணறி வருகின்றனர்.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறும் நிலை பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது. பொருளாதார அதிர்ச்சிகளைத் தாங்கும் சக்தி ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது. மேலும், வெளிநாடுகளில் பணிபுரியும் பாகிஸ்தானியர்கள் அனுப்பும் பணம் அந்நாட்டின் முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது. மத்திய கிழக்கில் ஏதேனும் போர்ச் சூழலோ அல்லது பதற்றமோ ஏற்பட்டால், அது பாகிஸ்தானின் பொருளாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் என்று அறிக்கை எச்சரிக்கிறது. “இந்த பொருளாதாரத் தாக்குதல் ஏழைகளைத்தான் முதலில் பாதிக்கும், மிக மோசமாகவும் பாதிக்கும்” என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

கல்வி மிக முக்கியம்

ஒரு நாட்டின் வளர்ச்சிக்குக் கல்வி மிக முக்கியம். ஆனால், பாகிஸ்தான் அரசு கல்விக்கான செலவினங்களைக் கடுமையாகக் குறைத்துள்ளது. 2025 நிதியாண்டில் கல்விக்கான செலவு 23 சதவீதம் குறைக்கப்பட்டு, 962 பில்லியன் ரூபாயாக உள்ளது. ஏழைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. தரமான கல்வி என்பது பள்ளிகளின் வசதிகளோடு தொடர்புடையது, ஆனால் நிதி இல்லாததால் பள்ளிகள் சீரழிந்து வருகின்றன. லட்சக்கணக்கான குழந்தைகள் இன்னும் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். குறிப்பாகப் பெண்களிடையே எழுத்தறிவு விகிதம் மிகவும் பின்தங்கியுள்ளது.

பாகிஸ்தான் தனது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமானால், கல்வித் துறையில் பெரும் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. கல்விக்கான முதலீட்டை அதிகரிப்பது மட்டுமே நீண்ட காலத் தீர்வாக அமையும். கல்விக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்கு வெறும் 0.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது பாகிஸ்தான் வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவுகளில் ஒன்றாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *