பழைய நினைத்தலும்.. புதியன புகுத்தலுமாக செயல்பாடுகள் இருக்கும்! -SICA தலைவர் ஒளிப்பதிவாளர் எஸ்.சரவணன் |

Spread the love

கோடம்பாக்கத்தில் உள்ள சினிமா சங்கங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்று, தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம். ( SICA ) 1972ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் பொன்விழாவைக் கடந்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

இச்சங்கத்தின் 2026- 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் தலைவராக எஸ்.சரவணனும், பொதுச் செயலாளராக ஏ.ரமேஷ்குமாரும், பொருளாளராக எம்.வெற்றிவேலும், துணை தலைவர்களாக ஆர்.திவாகரனும், பி.லோகநாதனும், இணை செயலாளர்களாக ஆர்.வேல்ராஜ், சேவியிலோ ராஜா, லக்ஷ்மன் குமார் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்வானோர்

தேர்வானோர்

இது தவிர “டாணாக்காரன்’ மாதேஷ் மாணிக்கம் உள்பட 15 பேர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வானார்கள். அமைச்சர் ராஜ்மோகன் நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து சான்றிதழ் வழங்கினார். ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் தலைவரான எஸ்.சரவணன், இதற்கு முன் ‘பூவே உனக்காக’, ‘சூர்ய வம்சம்’, ‘சங்கமம்’, ‘வல்லரசு’, ‘பிரியமான தோழி’ உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சிம்புவை வைத்து ‘சிலம்பாட்டம்’ என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார்.

பி.சி.ஸ்ரீராமுடன்..

பி.சி.ஸ்ரீராமுடன்..

சங்கத்தின் தலைவரான சரவணனிடம் பேசினோம். “தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் பாரம்பர்யமும் பெருமையும் மிக்கது. ஜாம்பவான் ஒளிப்பதிவாளர்கள் பலர் இந்தச் சங்கத்தின் தூண்களாக இருந்துருக்காங்க. தமிழ் சினிமாவுல 35 வருஷத்துக்கு மேலாகப் பயணிக்கிறேன். இந்தச் சங்கத்துல கடந்த 5 வருஷத்துக்கு முன்னர் துணை தலைவராக இருந்துருக்கேன்.

ஒரு காலத்தில் கோலோச்சிய ஒளிப்பதிவாளர்கள் வின்சென்ட், மாருதிராவ், கர்ணன்னு பல லெஜண்ட்ஸ்களை இந்த ஜென்சி தலைமுறையினரும் அறிந்து கொள்ளு வகையில ‘வேர்களைத் தேடி..’னு ஓர் ஆவணப்படம் எடுக்கப்போறோம். லெஜண்ட்களைப் போற்றும் வகையிலும் அவங்கள பெருமைப்படுத்தும் விதமாகவும் இந்த ஆவணப்படம் இருக்கும்.

அதாவது ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’னு சொல்வாங்க. ஆனா, நாங்க ‘பழையன நினைத்தலும் புதியன புகுதலும்’ ஆக இருப்போம். ஏன்னா, தென்னிந்திய முழுவதும் உள்ள ஒளிப்பதிவாளர்களின் மையமாக இந்தச் சங்கம் செயல்பட்டு வருது. இங்கிருந்துதான் மத்தமொழிகளுக்கு ஒளிப்பதிவாளர்கள் செல்வாங்க. அப்படிப் பெருமைமிக்கது இந்தச் சங்கம்.

எஸ்.சரவணன்

எஸ்.சரவணன்

இன்னிக்கு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துக்கிட்டே இருக்குது. அதனால அப்டேட் ரொம்ப முக்கியமானது. அதையும் இந்தத் தலைமுறையினர் அப்டேட் செய்து கொள்ளும் விதமாக, சில விஷயங்களை முன்னேடுக்கறோம். புது நிர்வாகிகள்ல பொதுச்செயலாளராக உள்ள ரமேஷ்குமார், ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கார்.

‘கயல்’, ‘தொடரி’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வெற்றிவேல் பொருளாளராக இருக்கார். இப்படி ஒரு ஆக்கப்பூர்வமான ஒரு உற்சாகமான டீம் அமைஞ்சிருக்கறதால எங்களோட பதவி காலமான மூணு வருஷத்துல இந்தச் சங்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போக உள்ளோம். பதவியேற்பு விழாவுல பங்கேற்ற அமைச்சர், சங்கத்தால் அரசிடமும் எளிமையாக அணுக முடியும்ங்கற நம்பிக்கையை விதைச்சிருக்கார்.

திரைப்படக் கல்லூரின் தலைவராக உள்ள மனோஜ் பரமஹம்சா, என்னோட 15 படங்கள்ல பணியாற்றியவர் என்பதால், பல வகையில் சங்கத்திற்கான பலம் கூடியிருக்குது. நிறைய மாஸ்டர்கள் இருக்கறதால, மாஸ்டர் கிளாஸ் நடத்தவும் திட்டமிட்டிருக்கோம். இப்படித் திட்டங்கள் நிறைய இருக்கு” என்கிறார் சரவணன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *