பாட்டிலுக்கு 10 ரூபாய்… நீங்க வாங்குனா நியாயம்; நாங்க வாங்குனா ஊழலா? கே.என்.நேரு பளிச் கேள்வி! – Kumudam

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக பேசிய கே.என்.நேரு, “பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று சொன்னீங்க. இப்போது நீங்க வாங்காமல் இருக்கிறீங்களா? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நியாயப்படுத்துகிறீர்கள். சாக்கு கொடுக்கவில்லை, சணல் கொடுக்கவில்லை, கூலி கொடுக்கவில்லை. அதனால் அந்த 10 ரூபாயை வாங்கியிருக்கிறார்கள் என்று நியாயப்படுத்தினீர்கள்.

நான் கேட்கிறேன்… உங்கள் காலத்தில் வாங்கினால் நியாயம்; எங்கள் காலத்தில் வாங்கினால் ஊழலா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், “பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிப்பது தொடர்பான விவரத்தை விளக்க உரையில் சொல்ல நினைத்தேன். ஆனால், இப்போது இது குறித்து விளக்கமாகக் கூறுகிறேன்.

பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிப்பதைப் பொறுத்தவரை, கொரோனாவுக்கு முன்பு வரை பாட்டிலுக்கு 2 ரூபாய் வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். பின்னர் அது 5 ரூபாயாக மாறியது. அதன்பிறகு 10 ரூபாயாக மாறியது.டாஸ்மாக்கில் வேலை செய்யக் கூடியவர்களை வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு தான்  பணியில் அமர்த்தினார்கள். அவர்கள் ஊதிய உயர்வு கேட்கும் போது, 500, 1,000, அதிகபட்சமாக ஓரிரு முறை 2,000 ரூபாய் வரை மட்டுமே உயர்த்திக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் 2003-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு தற்போது 53 வயதாகிறது. ஆனால், அந்த ஊழியர்களின் வருமானம் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பிடித்தம் போக 11 ஆயிரம் தான் சம்பளமாக இருந்தது. நீங்கள் அந்தக் கடைக்கு முறையாக மின் கட்டணம் செலுத்த வேண்டும்  அல்லவா? கடைக்கு வாடகை கொடுக்க வேண்டும் அல்லவா? அந்தக் கடையில் கூட்டிப் பெருக்குபவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் அல்லவா? இவை எதையும் நீங்கள் செய்யவில்லை. குடிப்பதற்காவது அங்கு தண்ணீர் வைத்தீர்களா? எந்த மதுபானம் வேண்டும் என்பதை நுகர்வோர் தீர்மானிக்க முடியாது, ஆட்சியாளர்கள் என்ன சொல்கீறார்களோ அதனை வாங்க வேண்டும் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அமைச்சர் பேசினார்.

மேலும் டாஸ்மாக் துறையைச் சீரமைப்பது என்பது சாதாரணமான காரியமா? 20 ஆண்டுகளாக இது ஊறிப்போய், வேரூன்றியுள்ளது. 10 ரூபாயைத் தடுக்கும் போது, ஒரு கடையைச் சீரமைக்க 10 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அவர்களை 10 ரூபாய் வாங்கத் தூண்டியது யார்? உங்கள் ஆட்சியில் இதை ஏன் தடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “நாங்கள் 5 ரூபாய்தான் வாங்கிக் கொண்டிருந்தோம். அதிகாரிகள்தான் அதிகமாக வாங்கச் சொன்னார்கள். ஊழல் குறித்து நான் இப்போது எதுவும் பேச விரும்பவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். இந்தத் துறையைச் சரிசெய்ய வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்க திமுகதான் காரணம்” என்று அமைச்சர் விக்னேஷ் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுத்த கே.என்.நேரு, “செந்தில் பாலாஜி இது தொடர்பாக நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறார். 10 ரூபாய்… 10 ரூபாய் என்று கூறி ஊழல் செய்ததாகச் சொன்னீர்கள். இப்போது தெரிகிறதா, இந்த 10 ரூபாய்க்கு என்ன செலவு என்று?

நீங்களே இதற்கான விளக்கத்தைச் சொல்லிவிட்டீர்கள். ஆக, 10 ரூபாயை நாங்கள் வாங்கவில்லை. அங்கு வேலை செய்தவர்கள்தான் வாங்கியிருக்கிறார்கள். பிறகு எப்படி எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியும்? எப்படி இது?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் விக்னேஷ், “அண்ணன் என்ன சொல்ல வருகிறார் என்றால், அந்தச் செலவுகளுக்காகத்தான் அவர்கள் 10 ரூபாய் வாங்கினார்களே தவிர, நாங்கள் வாங்கவில்லை; அதை எங்களிடம் கொடுக்கவில்லை என்று சொல்ல வருகிறார். 5 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தபோது, அதனை 10 ரூபாயாக வாங்கச் சொன்னதே அந்தத் துறை சார்ந்த நிர்வாகிகளும், துறை சார்ந்த அமைச்சரும்தான் என்று தொழிலாளர்கள் சொல்கிறார்கள்” என்றார்.

இதற்கு கே.என்.நேரு, “சம்பளம் போதவில்லை என்பதால்தான் அவர்கள் வாங்கினார்கள் என்று அமைச்சர் சொல்கிறார். ஆனால், எங்களை எதற்காக ஊழல், ஊழல் என்று சொல்ல வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதனால், சட்டப்பேரவையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கும் விவகாரம் தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் மற்றும் கே.என்.நேரு இடையே காரசாரமாக நடைபெற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *