கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் தேரடியை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி சின்னம்மாள் (77). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் சின்னம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று பிற்பகல் ஒரு மணி அளவில் தாய் சின்னம்மாளை பார்க்க மகள் வனஜா வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் சின்னம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கோட்டார் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் சின்னம்மாளின் பின்தலையில் பலத்த காயம் இருந்தது. அவரது கை மற்றும் தலைமுடி எரிக்கப்பட்டு ஆடைகள் கலைந்து மிகக் கொடூரமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சின்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் வைத்திருந்த நகைகளும், 15 ஆயிரம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட சின்னம்மாள் சடலத்தை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

சின்னம்மாள் வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்ததில் ஹெல்மெட் அணிந்த ஒருவர் வீட்டுக்குள் வந்து வெளியே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. எனவே அந்த நபர்தான் இந்த கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகித்தனர். கொலை நடந்த வீட்டில் எஸ்.பி ஸ்டாலின் விசாரணை நடத்தினார். மூதாட்டி சின்னம்மாள் நீண்ட நாட்களாக அரிசி போன்ற ரேஷன் பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வந்திருக்கிறார். இதனால் மூதாட்டி வீட்டில் எவ்வளவு பணம், நகை இருக்கும் என்று நன்கு தெரிந்த நபர் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.