தண்ணீரை விட்டு தரைக்கு வந்தால் சிக்கல்.. குளத்திலேயே வசிக்கும் 16 வயது சிறுவன்.. வினோத நோயால் அவதி | 16 year old boy lives in pond due to severe burning sensation in his body in west bengal

Spread the love

India

oi-Nantha Kumar R

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 16 வயது நிரம்பிய சிறுவன் உடல் அரிப்பு, எரிச்சல் காரணமாக தண்ணீர் நிறைந்த குளத்துக்குள்ளேயே வசிக்கிறான். குளத்து தண்ணீருக்குள் நின்றபடி அந்த சிறுவன் சாப்பிடுவதோடு, ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை குளத்துக்குள்ளேயே செலவழிக்கின்றன. ஏனென்றால் அவன் வினோத பிரச்சனையை சந்தித்து வருகிறான். அது என்ன? என்பது பற்றி இங்கு பா்க்கலாம்.

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் ஷேக். இவருக்கு 16 வயது ஆகிறது. இவர் வினோத பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுவன் இக்பால் ஷேக் உடலில் அடிக்கடி எரிச்சல் ஏற்பட்டு வந்தது.

west bengal medical

இதனால் இக்பால் ஷேக் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகள் பெற்று வந்தார். ஆனால் அவரது பிரச்சனை சரியாகவில்லை. தொடர்ந்து சிறுவனின் உடலில் எரிச்சல், அரிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டு வந்தது.

இதுபற்றி இன்னொரு மருத்துவமனையில் விரிவாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இக்பால் ஷேக் வினோத நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்தனர். அதாவது அவர் ‘எரித்ரோமெலால்ஜியா’ என்ற அரிய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என்று டாக்டர்கள் கருதுகின்றனர். இருப்பினும் இன்னும் அது உறுதி செய்யப்படவில்லை.

இந்த ‘எரித்ரோமெலால்ஜியா’ என்பது நரம்பு மற்றும் ரத்த நாளங்களை பாதிக்கும் அரிய நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்படும்போது உடல் சூடாவதோடு, ஆங்காங்கே வீக்கங்கள் ஏற்படும். உடல் பாகங்கள் சிவந்த நிறத்தில் மாறி வலியை ஏற்படுத்தும். குறிப்பாக கை, பாதங்களை அதிகமாக பாதிக்கும்.

இதுதவிர ககாது, முகத்திலும் இந்த பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் ஏற்படலாம். இந்த பாதிப்பு சில நிமிடங்கள் முதல் பல நாட்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. பலருக்கும் உடலின் வெப்பநிலையை இந்த நோய் எகிற வைக்கும். சிலருக்கு உடனடியாக உடலை குளிர வைப்பதன் மூலம் நிவாரணம் பெற முடியும்.

தற்போது இக்பால் ஷேக்-கும் இத்தகைய பிரச்சனையால் தான் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தான் அவர் ‘எரித்ரோமெலால்ஜியா’ நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அடிக்கடி உடல் எரிச்சல், அரிப்பு அதிகரிப்பதால் இக்பால் ஷேக் குளத்தில் உள்ள தண்ணீருக்குள்ளே இருக்கிறார். தண்ணீருக்குள்ளே இருக்கும்போது உடல் எரிச்சல், அரிப்பு குறைவதால் இக்பால் ஷேக் இதனை செய்து வருகிறார். தண்ணீருக்குள்ளே நனைந்தபடி நின்று அவர் சாப்பிடுகிறார். ஒரு நாளில் பெரும்பாலான நேரங்களை இக்பால் ஷேக் தண்ணீருக்குள்ளே செலவழிக்கிறார். இதனால் பள்ளி உள்பட எங்கும் இக்பால் ஷேக்கால் செல்ல முடியவில்லை. இக்பால் ஷேக் மற்றும் அவரது குடும்பத்தினர் உதவி கேட்டு வருகின்றனர்.

இக்பால் ஷேக் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. இதனால் அந்த நோயை குணமாக்க தேவையான பணம் இல்லை. இதனால் இக்பால் ஷேக் தொடர்ந்து அரியவகை நோயால் அவதிப்பட்டு வருகிறார். தனது அரியவகை பிரச்சனைக்கு அவனது குடும்பத்தினர் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை அளிப்பவர்களிடம் உதவி கோரியும், அறிகுறிகள் தொடர்ந்து நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *