
பிக் பாஷ் லீக் ‘கிரிக்கெட் ஆஸ்திரேலியா’ அமைப்பால் 2011-ம் ஆண்டு துவங்கப்பட்டது. மெல்போர்ன் ஸ்டார்ஸ், சிட்னி தண்டர், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களைச் சேர்ந்த அணிகள் பிக் பாஷ் லீக் தொடரில் பங்கேற்கின்றன. இந்த கிரிக்கெட் தொடருக்கு ஆஸ்திரேலியாவில் மட்டுமில்லாது உலக முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் புகழ்பெற்ற ‘பிக் பாஷ்’ (Big Bash League) இருபது-20 (T20) கிரிக்கெட் தொடரின் புதிய சீசன் விரைவில் துவங்கவுள்ளது. இதற்கிடையே, தொடரின் சில போட்டிகளை ஆஸ்திரேலியாவிற்கு வெளியே முதன்முறையாக இந்தியாவில், குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் பிசிசிஐ (BCCI) பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தன.
பிக்பாஷ் தொடருக்கு பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக சென்னையில் சில போட்டிகளை நடத்த ஆஸி., கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2026 பிக் பாஷ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என தெரிகிறது. இதனை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மோடி இதனை அறிவிப்பார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.