சென்னையைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் பிரியா செல்வராஜ், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம், வெறும் 7 மாதங்களுக்குள் 8,000 மீட்டருக்கும் அதிக உயரமுள்ள இரண்டு சிகரங்களில் வெற்றிகரமாக ஏறிய 50 வயதுக்கு மேற்பட்ட ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தனது பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், கடும் குளிரால் தனது கைகளிலும் கால்களிலும் ஏற்பட்ட கடுமையான காயங்கள் மற்றும் கொப்புளங்களின் புகைப்படங்களையும் காட்டி, இந்த வெற்றியின் பின்னணியில் இருந்த போராட்டங்களை விவரித்தார்.
பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தியான மருத்துவர் பிரியா, சென்னை ஜி.ஜி மருத்துவமனையின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.