சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு எழுந்துள்ள சிக்கல்களால் திரைப்படத்தின் முதல் காட்சியான, 9 மணி ஷோ ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
நேற்றிரவே திரைப்படத்தின் ரிலீஸ் பாதிக்கப்படும் என இணையத்தில் பேசப்பட்டு வந்த நிலையில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, “எனது அன்பிற்குரிய ரசிகர்களே, தற்போதைய சூழல் குறித்து என்னிடம் உறுதியான பதில் ஏதுமில்லை. பிரச்சினைகளைத் தீர்க்கத் தயாரிப்பாளர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பல தடைகள் வந்திருக்கின்றன.

ஆனால் ஏதோ ஒரு வகையில் கடவுள் அந்தத் தடைகளையெல்லாம் கடக்க வைத்து, 32 மாதங்களுக்குப் பிறகு இன்று நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.
இந்த முறையும் அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கருப்பன் எல்லாத் தடையும் அடிச்சு உடைப்பான். ‘கருப்பு’ நாளைக்குக் காலைல செமையா ரிலீஸ் ஆகும்..!நம்பிக்கை வைங்க, நடக்கும்…!!!” எனப் பதிவிட்டிருந்தார்.
ஆனால், இயக்குநர் போட்ட பதிவைத் தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு திரைப்படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்படுவதாக அவருடைய எக்ஸ் பக்கத்தின் மூலம் அறிவித்தார்.
எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாகி இருப்பதாகச் சமூக வலைதளப் பக்கங்களில் படத்தின் ரிலீஸ் பற்றிய உறுதியான தகவலைக் கேட்கத் தொடங்கினர். இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் படத்தின் ரிலீஸ் தொடர்பாகப் பேசியிருக்கிறார்.
அவர், “நேற்று மாலையிலிருந்து என்னால் அழைப்புகளை எடுக்க முடியவில்லை. இரவு தூங்குவதற்கு 1 மணி ஆகிவிட்டது.
‘கருப்பு’ திரைப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் சார்பிலும், விநியோகஸ்தர் சங்கத்தின் சார்பிலும், தயாரிப்பாளர்கள் சார்பிலும் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறோம்.
பிரச்சினை முடியக் கூடிய நிலைமைக்கு வந்துவிட்டது. தயவு செய்து ரிலீஸ் தொடர்பாக எனக்கு யாரும் அழைக்க வேண்டாம். 100 பேருக்கு மேல் போன் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
என்னால், இங்கு மற்ற வேலைகளைக் கவனிக்க முடியவில்லை. திரைப்படம் உறுதியாக இன்று ரிலீஸ் ஆகிவிடும் என நம்புகிறேன். திரைப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருக்கிறது.
அதனால், திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்றுதான் முயன்று வருகிறார்கள். ஆர்.ஜே. பாலாஜி சொன்னதுபோல், ‘கருப்பன் வருவான், காப்பாற்றுவான்!'” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.